பிரிட்டனின் புதிய பிரேரணையில் “இனமோதல்” எனும் பதம் சேர்ப்பு!

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்றசொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

அப்பிரேரணை நாளைய தினம் (06.10.2025) ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப் படவிருப்பதுடன், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் “எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அப்பிரேரணை தொடர்பில் கடந்த மாத நடுப்பகுதியில்

உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர், தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட பிரேரணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது.

அதன்படி அத்திருத்தப் பிரேரணையில் மோதல்கள் என்ற சொல்லின் ஊடாக இனமோதல் எனும் சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருப்பதுடன் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறைப் பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அத்திருத்தப்பிரேரணை பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான கோரிக்கையை நீர்த்துப்போகச்செய்யும் விதமாக அமைந்திருப்பதாக பல்வேறு தரப்பினராலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அதனையடுத்து நாளைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையின் இறுதி வரைவில் &#39 இனமோதல்ரூசூ39; என்ற பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பதுடன், அதுசார்ந்த விடயதானம் பின்வருமாறு திருத்தப்பட்டிருக்கிறது:

“இனமோதல்களின் விளைவாக இலங்கை முகங்கொடுத்த மிகமோசமான துன்பங்களை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்தமையையும், பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய இனவாத அரசியலுக்கு இடமளிக்காமல் இருப்பதற்கான அதன் கடப்பாட்டையும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதுடன் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் வரவேற்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் இப்பிரேரணை நாளை திங்கட்கிழமை (06.10.2025) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன்போது பேரவையில் இப்பிரேரணையின் உள்ளடக்கத்தை நிராகரித்து இலங்கை எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும், அப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பைக் கோராது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி நாளைய தினம் இப்புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் பட்சத்தில், அத்தீர்மானத்துக்கு அமைய உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடரில் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *