இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தீர்மானம் இன்று நிறைவேற்றப்படும்!

ஐ.நா

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை இன்று திங்கட்கிழமை முன்வைக்கும் பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்குகின்றன.

பிரிட்டன் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைபு கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தப் பிரரேணை நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமல் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகின்றது. அதற்கு முன்னதாக இன்றையதினம் பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *