
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், கருவறைக்கு முன்பாக உள்ள இரு துவாரபாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில், 4 கிலோ அளவுக்கு தங்கம் குறைந்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கேரள சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையில் சலசலப்பு நிலவியது.
மேலும், இந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.