“கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டாலும் அது நிற்காது” – அண்ணாமலை .

கோவை

கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டாலும் அது நிற்காது என்று தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள மருந்து நிறுவனம் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்தை அருந்திய 11 குழந்தைகள் மத்திய பிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் இருவர் இறந்துள்ளனர். அது சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு காஞ்சிபுரம் வந்துள்ளது.

மருந்து என்பது கெட்டுபோய்விட்டது என்று சொல்வோம். ஆனால் இந்த சம்பவத்தை பொறுத்தவரை மருந்து கெட்டுபோய்விட்டதாக சொல்ல முடியாது. அதில் யாரோ டை எத்திலீன் கிளைக்கால் கலந்துள்ளனர். தேவையில்லாத ஒரு பொருளை உள்ளே கலந்து, அது விஷமாக மாறியிருக்கிறது.

இது கவனக்குறைவா, வேண்டும் என்றே செய்ததா என்பதை அறிய நாம் காத்திருக்க வேண்டும். யார் இதில் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாடு முழுக்க நீங்கள் பார்த்தீர்கள் என்றால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட, எப்படி மத்திய அரசை பயன்படுத்தி மாநிலத்தின் வளர்ச்சிக்கு எப்படி மத்திய அரசை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் எல்லாரும் பார்க்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் மட்டும் மத்திய அரசை எதிரியாக கருதி முதல்வர் ஸ்டாலின் பேசும் பேச்சுகள் உள்ளன. மதுரை போகிறார், ராமநாதபுரம் போகிறார், மீனவ நண்பர்களை சந்திக்கிறார், சம்பந்தமே இல்லாமல் அவர்கள் செய்த தப்பை மறைப்பதற்காக கச்சத்தீவு பற்றி பேசுகின்றனர். ஆரோக்கியமாக எதை பற்றியும் பேசாமல் மத்திய அரசை தூண்டி விடுகின்றனர்.

தமிழ்நாடு யாருக்கு எதிராக போராடும் என்று கவர்னர் கேட்கும் கேள்வி சரிதான். இன்றைக்கு அவர்கள் போராடி கவர்னரை மாற்ற முடியுமா? அந்த பொறுப்பே இல்லாமல் செய்துவிட முடியுமா? அப்படி முடியாது. மக்களை வேண்டும் என்றே தூண்டிவிட்டு, மக்களை ஒரு போராட்ட மனநிலைக்கு திமுக கொண்டு செல்கிறது. இது ஒரு ஆளுங்கட்சி செய்யவேண்டிய வேலையே இல்லை.

ஆளும்கட்சி எல்லாவற்றையும் அனுசரித்துத்தான் போக வேண்டும். கவர்னர் அதன் அடிப்படையில் கேள்வி கேட்டுள்ளார். ஆனால் முதல்வர் மறுபடியும் கவர்னரிடம் இதுபற்றி கேட்கிறார். நமது நாட்டுக்கு இது நல்லதல்ல. தொடர்ந்து, ஒரு முதல்வர், கவர்னரை தொடர்ந்து சீண்டிக் கொண்டு இருப்பது, தமிழகத்திற்கு நல்லதல்ல என்பது எங்கள் கருத்து.

கரூர் விவகாரத்தை பொறுத்தவரை, விஜய் மீது வழக்கு போட்டு, குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் என்றால் அந்த வழக்கே நிற்காது. கொஞ்சமாவது சட்டம் தெரிந்த யார் வேண்டுமானாலும் சொல்வார்கள். அல்லு அர்ஜூன் வழக்கு அப்படித்தான் ஆனது. அவர்கள் மீது வழக்கே பதிவு செய்ய முடியாது.

சும்மா இவர்களின் அரசியல் ஆசைக்காக கைது செய்யலாம்,ஒரு இரவு சிறையில் அடைக்கலாம், அடுத்த நாள் காலை 10 மணிக்கு ஜாமின் கிடைத்து வெளியில் வந்துவிடுவார்கள். இதுஎல்லாம் சின்ன பிள்ளைகள் விளையாடும் ஆட்டத்துக்கு சமம்

யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் உள்பட தவெக நிர்வாகிகள் யாராவது இருக்கிறார்களா? அனுமதி வாங்கியவர்கள், அனுமதி அளித்த அதிகாரிகள், அவர்களின் பக்கம் தவறு உள்ளதா? அதே போல அனுமதி அளித்த அதிகாரிகள் தப்பு செய்துள்ளனரா? இவர்கள் தான் சம்பந்தப்பட்டவர்கள்.

நிகழ்ச்சி அனுமதி கிடைத்த பிறகு நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூப்பிடலாம், ஏன் முதல்வர் போகக்கூடிய நிகழ்ச்சி எத்தனையோ இந்தியாவில் நடக்கிறது. அப்படி ஒவ்வொரு அனுமதியும் முதல்வருக்கு தெரிந்து இருக்குமா என்றால் தெரிந்து இருக்காது.

தவெக மீது தவறுகள் இருக்கிறதா என்றால் தவறுகள் இருக்கிறது. சில விஷயங்களை அவர்கள் சரியாக செய்திருக்க வேண்டும் என்று சொல்வேன். ஆனால் விஜய்யை குற்றவாளியாக மாற்ற வேண்டும் என்றால் அது முடியவே முடியாது. அது வாய்ப்பே இல்லை.

அரசியலுக்காக சிலபேர் பேசுகின்றனர். திருமாவளவன் எம்பியாக உள்ளவர். அவரின் கட்சியிலும் இதே போன்றதொரு சம்பவம் நடந்தாலும்… அப்படி நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் திருமாவளவனுக்கும் நான் ஆதரவாக நிற்பேன். அவரது கட்சியில் இருந்து பெருமளவில் கட்சியினர் வெளியேறுவதை பார்க்கிறார். வேறு, வேறு கட்சிக்கு போகின்றனர்…

அந்த வயிற்றெரிச்சலில் தான் திடீரென்று திருமாவளவன், விஜய்யை பற்றி தாக்குவதோ, மத்திய அரசின் மீது தமது விமர்சனத்தையோ கடுமைப்படுத்தி இருப்பதாக நான் பார்க்கிறேன்.

யாருமே தவெகவையோ, விஜய்யையோ பாதுகாக்க வேண்டிய அவசியமோ எங்களுக்கு இல்லை. நியாயத்தை நியாயமாக பேசுகிறோம். எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியால் நசுக்கப்படும் போது நாங்கள் பேசுகிறோம்.

இந்த விஷயத்தில் தவெகவை நசுக்க பார்க்கின்றனர். தலைவர்களை நசுக்க பார்க்கின்றனர், அதனால் கருத்து சொல்கிறோம். அதற்காக நாங்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறோம், அவருடன் இருக்கின்றோம்,பேசுகிறோம் என்பது அப்பாற்ப்பட்ட கருத்து.

இன்றைக்கு இவர்கள் போட்டுள்ள எப்ஐஆரிலே திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த கட்சியின் நிர்வாகி ஒருவர் Gen Z புரட்சி பற்றி பேசுகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது பாஜ, தவெகவுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பேச என்ன உரிமை இருக்கிறது?

நீங்கள்(திமுக) ஆட்சி நடத்துகின்றீர்கள்? நீங்கள் போட்ட 2 எப்ஐஆர்களில் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காத போது எங்களை நோக்கி கைகாட்டி நாங்கள் அடைக்கலம் கொடுக்கிறோம் என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது. – இவ்வாறு அண்ணாமலை பேட்டியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *