லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும், கேணல் கிட்டு பீரங்கி படையணியின் சிறப்புத்தளபதி கேணல் ராயு (குயிலன்) மற்றும் லெப். கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரின் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்தில் நாட்டின் ஜெனிவா மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்டது.

38 ஆண்டுகளுக்கு முன் ஒக்டோபர் மாதம் 3ம் நாள் 1987ம் ஆண்டு கடலில் வைத்து கடற்புறாவில் பயணித்த 17 வேங்கைகள் இந்திய இராணுவத்தினரின் சதிவலயினால் காட்டிக்கொடுக்கப்பட்டு இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பலாலியில் இராணுவ தளத்தில் இருந்து மேலதிக விசாரணைக்காக கொழும்பு கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் கொள்கையின் வழி நின்று ஒக்டோபர் மாதம் 5ம் 1987ம் ஆண்டு பிற்பகல் 05:05 மணியளவில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினை தழுவிக்கொண்ட 12 வேங்கைகளான குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா, ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், ரெஜினோல்ட், பழனி, கரன், தவக்குமார் ஆகியோரினதும் வணக்க நிகழ்வும் நேற்று (05.10.2025) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி வணக்க நிகழ்வில் தமிழர்களின் மரபிற்கமைவாக பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு தொடர்ந்து ஈகைச்சுடர், மற்றும் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அகவணக்கத்துடன் மக்களால் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும் காணிக்கையாக்கப்பட்டன.
இவ்வெழுச்சி நிகழ்வில், பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் நிகழ்வுகளாக வணக்கப்பாடல்கள், கவிவணக்கம், நினைவுரை, எழுச்சி நடனம் போன்றவை இடம்பெற்றிருந்தது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றிருந்தது.