தமிழகத்தில் நகர பகுதிகளில் ‘ஸ்கிரப் டைபஸ்’ என்ற உண்ணி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னை

தமிழகத்தில் மலை பகுதிகளை தாண்டி, நகர பகுதிகளில் ஓட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும், ‘ஸ்கிரப் டைபஸ்’ என்ற உண்ணி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

‘ஸ்கிரப் டைபஸ்’ என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று. ‘ரிக்கட்ஸியா’ எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது, அவர்களுக்கு உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது.

பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டோருக்கு, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றுடன் தடிப்புகள் போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. பெரும்பாலும், திருவண்ணாமலை உள்ளிட்ட மலைப் பகுதியிலும், புதர் மண்டிய இடங்களிலும் வசிக்கும் மக்களிடையே இந்த பாதிப்பு இருந்தது.

தற்போது, சென்னை போன்ற நகர பகுதிகளிலும், ‘ஸ்கிரப் டைபஸ்’ காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.


‘ஸ்கிரப் டைபஸ்’ பாதிப்பு ஏற்பட்டால், பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு, சிவப்பாக சிறிய தடிப்புகள் ஏற்படும்.

தலைவலி, குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். ஆரம்பத்தில் கண்டறியாமல் அலட்சியப்படுத்தினால், பூச்சி கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் செயலிழக்கும். இதன் வாயிலாக, கோமா, மரணம் உள்ளிட்ட தீவிர பிரச்னைகளும் உருவாகும்.

உடனடி சிகிச்சை தமிழகத்தை பொறுத்தவரை, மலைப்பகுதிகள், புதர் மண்டிய இடங்களில், ‘ஸ்கிரப் டைபஸ்’ ஓட்டுண்ணிகள், பூச்சிகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றால் மாதந்தோறும், 50 முதல் 100 பேர் வரை பாதிக்கப்பட்டாலும், உடனடி சிகிச்சையில் குணமடைந்து விடுகின்றனர்.

அறிகுறிகளை அலட்சியப்படுத்தும் ஓரிருவர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது, தமிழகத்தில் தினசரி, ஐந்து முதல் 10 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இந்தாண்டில் இதுவரை, 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பொது மக்கள் தங்கள் வீட்டை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி, சுத்தமாக பராமரிக்க வேண்டும். புதர் மண்டிய இடங்கள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது, பூச்சிகள், ஒட்டுண்ணிகள் நம் உடல் மீது படாதவாறு தற்காத்து கொள்வது அவசியம். இவ்வாறு கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *