கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவதாக பினராயி விஜயன் உறுதியளிக்கிறார்.

திருவனந்தபுரம்

”கேரளாவுக்கு புலம்பெயர்ந்த தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான திருத்தத்தை விரைவாக மேற்கொள்ளும்படி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்,” என, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.

பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு குடிபெயர்ந்து பல ஆண்டு களாக அங்கு வசித்து வருகின்றனர்.

கடந்த 1950க்கு முன்பாக கேரளாவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு வகுத்து இருக்கிறது.

இதன் காரணமாக, கேரளாவில் வசிக்கும் தமிழ் பேசும் மொழி ரீதியிலான சிறுபான்மையினருக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த விதியில் திருத்தம் கொண்டு வரக்கோரி, நடுவட்டம் கோபாலா கிருஷ்ணன் குழு அறிக்கை சமர்ப்பித்தது.

அதில், 1950க்கு பதில், 1970, ஜன., 1 வரை புலம்பெயர் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள சட்டசபையில் இந்த விவகாரம் குறித்து எம்.எல்.ஏ., ராஜா கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதில்:

கடந்த, 1950க்கு முன்பாக பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு நிரந்தரமாக புலம் பெயர்ந்த தமிழ் பேசும் சிறுபான்மையினருக்கு மட்டுமே, தற்போதுள்ள விதிகளின் படி ஜாதி சான்றி தழ் வழங்கப்பட்டு வருகிறது.

திருவிதாங்கூர், கொச்சின் மற்றும் மதராஸ் மாகாணங்களாக இருந்தபோது, அதாவது 1950க்கு முன்பாக யாரெல்லாம் கேரளாவுக்கு புலம் பெயர்ந்து நிரந்தரமாக குடிபெயர்ந்தனர் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை.

எனவே, தற்போதுள்ள ஷரத்துகளை திருத்த விரிவாக சரிபார்க்க வேண்டி இருக்கிறது.

மேலும், புலம்பெயர் விவகாரம் மத்திய அரசின் பட்டியலுக்குள் இருக்கிறது. எனவே, குறிப்பிட்ட ஷரத்தை மத்திய அரசு மட்டுமே திருத்த முடியும். இது தொடர்பாக ஏப்., 16ல் நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.

தற்போதுள்ள விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கான கருத்துருவை ஏற்படுத்த, அப்போது முடிவு செய்யப்பட்டது. அதன்படி விரிவான கருத்துரு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மீண்டும், ஆக., 26ல் இது குறித்து அமைச்சரவையில் விவாதித்தோம்.

அப்போது தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது என முடிவு எடுத்துள்ளோம். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *