மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளை கஸ்ட மருத்துவமனைகள் என்ற பட்டியலில் இருந்து அகற்றி சமச்சீரான சேவை வழங்கலில் இணைக்குமாறும், உள்ளகப்பயிற்சி மருத்துவர் சேவைவசதியை வழங்குமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட விசேட மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறையால் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் உள்ள வெற்றிடங்களை விசேட தர மருத்துவர்களைக் கொண்டு நிரப்ப முடியவில்லை எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அனைத்து மாவட்ட பொதுவைத்தியசாலைகளுக்கும் போதுமான அளவு பணியாட்தொகுதி மற்றும் பௌதீக வளங்கள் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (07) வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோதே இந்த விடயம்தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
பேரவையை தலைமை சபாநாயகர் அவர்களே,
கடந்த பாராளுமன்ற அமர்விலும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் பௌதிக வள குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மிகவும் விரைவாக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவ விடுதி அமைக்கப்படும் என கௌரவ சுகாதார அமைச்சரும் பின்னர் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனான சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் உறுதியளித்தனர். இவ் உறுதியளிப்புகள் காலந்தாழ்த்தாது செயல்வடிவம் பெறும் என நம்புகிறேன்.
உள்ளக பயிற்சி மருத்துவர்களுக்கான சேவை நிலையங்களாக கடந்த கடந்த 2025.06.06 அன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தீவில் உள்ள 23 மாவட்டங்களைச் சார்பாக்கும் 64 மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டு இருந்தன.
28 ஆதார வைத்தியசாலைகளில் கூட, காணப்படும் இவ்வசதி நாட்டின் 24ஆவது 25ஆவது மாவட்டங்களாக உள்ள மன்னாரிலும் முல்லைத்தீவிலும் இல்லை என்பது இந்த நாட்டின் மருத்துவ சேவை வழங்கலில் மேற்படி இரு மாவட்டங்களும் மிகவும் சமச்சீராக அணுகப்படவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.
முல்லைத்தீவில் 21 மருத்துவர்கள் பற்றாக்குறை. ஒரு நிரந்தர மருத்துவ நிபுணர்கூட இல்லை. மருந்துக்கலவையாளர்கள் 23 பேர் இல்லை. தாதிய உத்தியோகத்தர் 13 பேர் இல்லை. 2025.07.21 இன் படி இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆளணி வெற்றிடம் முல்லைத்தீவு பிராந்திய மருத்துவ சேவை வழங்கலில் இருப்பதும் சமச்சீரற்ற சேவை வழங்கலின் சான்றே.
கௌரவ தலைமை சபாநாயகர் அவர்களே, எனது முதலாவது கேள்வி
எப்போது அல்லது எப்போதிருந்து எங்களையும் உங்களில் ஒருவராக நீங்கள் காணும் உலகத்தை நாங்களும் காணத்தக்கவர்களாக, நீங்கள் பெறும் மருத்துவ வசதியின் தரத்தை நாங்களும் பெறக்கூடியவர்களாக, எங்கள் மன்னாரையும் முல்லைத்தீவையும் கஸ்ட மருத்துவமனைகள் என்ற பட்டியலில் இருந்து அகற்றி சமச்சீரான சேவை வழங்கலில் இணைப்பீர்களா? உள்ளகப்பயிற்சி வழங்கல் வசதியை வழங்குவீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதற்குப் பதிலளிக்கையில்,
முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு பயிற்சி மருத்துவர்கள் அனுப்பப்படுவதில்லை.
ஏன்எனில் இலங்கை மருத்துவ சபையால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு மட்டுமே பயிற்சிக்காக பயிற்சி மருத்துவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். மன்னார் மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகள் இன்னும் மருத்துவ சபையால் அங்கீகரிக்கப்படவில்லை.
இதற்கு காரணம், மருத்துவ சபையின் அளவுகோல்களின் படி medicine, surgery, gynecology, pediatrics என்று நான்கு துறைகளுக்கும் விசேட வைத்தியர்கள், சபைத்தராதரம் மிக்க வைத்திய நிபுணர்கள் இருந்தால் தான் பயிற்சி மருத்துவர்களைப் பெறமுடியும். நாம் பயிற்சிமருத்துவர்களை அனுப்புவதற்கு எங்களுக்கு விருப்பம் தான். பயிற்சி மருத்துவர்களை அனுப்ப முடிந்தால் அந்த மருத்துவ பற்றாக்குறைக்கு விடை கண்டறியப்படும்.
இருப்பினும் இங்கே முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் மருத்துப் பயிற்சி அளிக்கும் இரண்டு சபைத்தராதரம் மிக்க மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்கும் பதினான்கு மருத்துவர்கள் இருந்தாலும் இரண்டு சபைத்தராதரம் மிக்க மருத்துவ நிபுணர்கள் உள்ளனர்.
மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட விசேட மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறையால் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் உள்ள வெற்றிடங்களை விசேட தர மருத்துவர்களைக் கொண்டு நிரப்ப முடியவில்லை.
இருப்பினும் ஏற்கனவே வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற மற்றும் அதைப் பெறவிருக்கும் தகுதி வாய்ந்த மருத்துவர்கள், மருத்துவ சபையில் பதிவுசெய்ய தகுதி உடையவர்கள் இந்த மருத்துவமனையில் சிறப்பு மருத்துவசேவைகளைப் பெற நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனது முந்தைய பதிலில் நான் கூறியது போல் வெளிநாட்டுப் பயிற்சிக்குச் சென்ற, ஆனால் மருத்துவச்சபையால் சான்றளிப்பைப் பெறாத மருத்துவர்களால் எமது சிறப்பு மருத்துவச்சேவைகள் வழங்கப்படுகின்றன. மறுபுறம் வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சிக்கென செல்லப் போகிறவர்களிடம் இருந்து தான் இந்த சேவையை நாங்கள் பெறுகிறோம்.
எனவே இலங்கைக்கு வரும் செல்லும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் சபைத்தரம் பெற்றவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே நாங்கள் சேவையை வழங்குகிறோம்.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைவசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மேலும் தேவையான விசேட மருத்துவப் பரிசோதனைகளுக்கும், தனித்துவமான இரசாயன பரிசோதனைளுக்கும் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவகையிலே யாழ்ப்பாணம் மருத்துவமனை, வவுனியா மருத்துவமனை, அனுராதபுரம் மருத்துவமனை, சில சந்தர்ப்பங்களில் கண்டி மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கும் நோயாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.
அனைத்துப் பரிசோதனைகளையும், அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கமுடியாத நிலைகாணப்படுகின்றது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட பொதுவைத்தியசாலைகளுக்கும் போதுமான அளவு பணியாட்தொகுதி மற்றும் பௌதீக வளங்கள் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.
அரச நிதிமூலமாகவும், அன்பளிப்புக்களினூடாகவும் மாங்குளம், கிளிநொச்சி பருத்தித்துறை, யாழ்ப்பாணம் மருத்துவமனைகளை மேம்படுத்தவேதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
தேவையான மனிதவளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
உங்களுக்கு எங்களுக்கு என்று ஒன்றில்லை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உகந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கான வசதிகளை வழங்க அரசாங்கம் நம்புகிறது. எனவே நாங்கள் அதை நோக்கியே செயற்படுகிறோம்.
மாவட்ட பொது மருத்துவமனைகளின் வளர்ச்சியும் அவை மாவட்ட பொது மருத்துவமனைகளாக மாற்றமடைந்ததும் வெவ்வேறு காலப்பகுதிகளில் நடந்தவை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். அதனால் அவை அபிவிருத்தியில் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. முல்லைத்தீவு,வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகள் இன்னும் மாகாணசபைகளின் கீழ் உள்ளன. அவை நிரல் அமைச்சின் கீழ் அல்ல. மாகாணசபைகள் என்றில்லை. அனைத்து மருத்துவமனைகளுக்கும் நாங்கள் ஊழியர்களை வழங்குகிறோம்.
நீங்கள் குறிப்பிட்டது போல வளங்களை மட்டுமல்ல சில நேரங்களில் எங்கள் நிதிக்கு கூடுதலாக வெளிநாடுகளில் இருந்து பெறுவதும் இந்த மருத்துவமனைகளின் வளர்ச்சிக்குத்தான் அதில் ஒன்று தான் மன்னாரில் முதலே கூறியது, விபத்து மற்றும் அவசர சிகிச்சை விடுதியை கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டோம். இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் முல்லைத்தீவுக்கு ஒரு திட்டத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். அந்த வளர்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.
நோயாளிகளை பார்ப்பதற்கு போதுமான மருத்துவ நிபுணர்கள் எம்மிடம் இல்லை என்பதே எமக்கு மிகவும் கவலையான விடயம்.
சிலநேரங்களில் முல்லைத்தீவு மன்னார் மட்டுமல்ல இதுபோன்ற மருத்துவமனைகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டியிருக்கும். நாடு முழுவதுமே சிலரை அனுப்ப வேண்டி இருக்கும். வெளிநாட்டுப் பயிற்சிக்கு முன் பலர் செல்ல வேண்டியிருக்கும். பயிற்சி முடிந்து சபைத்தராதரம் பெற முன்னரும் பலர் செல்லவேண்டி இருக்கும். பிறகு, அடிக்கடி இடமாற்றங்களை நாங்கள் செய்யவேண்டி இருக்கும். ஆனால் இது அங்கு மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல. சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் போது அதற்கேற்ப நிலைமையை நிர்வகிக்கிறோம் – என்றார்.