அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியாலை

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் (08.10.2025) அரியாலை கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்துக்கு வரவேண்டும் என்று கூறி, வீதியை வழிமறித்து நின்றனர். இதனால் அவ்வீதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

பின்னர், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் போராட்ட இடத்துக்குச் சென்றார். இதன்போது தமது பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள், “இந்தப் பகுதியில் இனிமேல் குப்பை கொட்டுவதற்காக குப்பை கொட்டும் வாகனங்கள் வந்தால் அந்த வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர், இந்தப் பிரச்சினை தொடர்பான கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் மகஜர் ஒன்றினை மக்கள் தவிசாளரிடம் கையளித்தனர்.

மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர், போராட்டக்காரர்கள் பேரணியாக ஆளுநர் செயலகத்துக்குச் சென்று, அங்கும் மகஜர் ஒன்றை வழங்கினர்.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்,

உலகமெங்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக மக்கள் போராடி வருகின்றனர். அரியாலையூர் மக்களாகிய நாமும் நமது ஊரைப் பாதுகாப்பதற்காக நமது அழகிய ஊரின் நிலம், கடல், நீர்வளம், தூய காற்று போன்ற இயற்கையின் கொடைகளை காப்பாற்றுவதற்காக போராடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

நல்லூர் பிரதேச சபை, எமது ஊர் மக்களுடன் எந்த வகையிலும் கலந்து பேசாமல், சூழலை மாசுபடுத்தக்கூடிய குப்பைகளை எமது ஊருக்குக் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது எமது ஊர் மக்களால் மட்டுமல்ல, இயற்கையையும் மனிதத்தையும் நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.

இயற்கைப் பசளை உற்பத்தி என்ற பெயரில் ஏமாற்றுத்தளமாக எந்த வகையிலும் வகைப்படுத்தப்படாத – மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி, எமது ஊரை குப்பைமேடாக மாற்றும் முயற்சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிடவேண்டும்.

எமது இயற்கை வளங்கள் இன்றைய தலைமுறையான எமக்கு மட்டுமானதல்ல, எதிர்கால தலைமுறைக்கும் சொந்தமானவையாகும்.

எமது ஊரின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உண்டு. இதனால் மக்களுக்கும் இயற்கைக்கும் விரோதமான குப்பை மேட்டுத் திட்டத்தைக் கண்டித்தும் அதனைக் கைவிடக் கோரியும் மக்கள் அணிதிரள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *