கேரள உயர் நீதிமன்றம், இரத்தத்தில் ஆல்கஹால் இருப்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விபத்து காப்பீட்டு கோரிக்கைகளை காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

திருவனந்தபுரம்

கேரள அரசின் நீர்பாசனத் துறை ஊழியராக பணியாற்றியவர் கே.எஸ்.ஷிபு. இவர் கடந்த 2009, மே, 19ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சுற்றுலா பஸ் மீது மோதி உயிரிழந்தார்.

இவரது பெயருக்கு, ‘நேஷனல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் அரசு குழு காப்பீடு செலுத்தி இருந்தது.

அதன் அடிப்படையில், ஏழு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையை வழங்கக் கோரி காப்பீடு நிறுவனத்தில் ஷிபுவின் மனைவி முறையிட்டார். அதை காப்பீடு நிறுவனம் நிராகரித்தது. இதையடுத்து, காப்பீடு குறைத்தீர்ப்பு அமைப்பை நாடினார். தொகையை அளிக்கும்படி குறைதீர்ப்பு அமைப்பு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து காப்பீடு நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணையில், ‘விபத்து நடந்தபோது ஷிபு மது அருந்தி இருந்தார். ரத்தத்தில் மது கலந்து இருந்ததை மருத்துவ அறிக்கை உறுதி செய்துள்ளது’ என, வாதங்களை முன்வைத்தது.

கடந்த, 2022ல் இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி, காப்பீடு குறைதீர்ப்பு அமைப்பின் உத்தரவை உறுதி செய்தார். இதையடுத்து, கடந்த 2023ல் காப்பீடு நிறுவனம் சார்பில் மீண்டும் டிவிஷன் அமர்வில் முறையிடப்பட்டது.

இவ்வழக்கை கடந்த இரு ஆண்டுகளாக விசாரித்து வந்த டிவிஷன் அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன் விபரம்:

விபத்து நடந்தபோது, ஷிபு மதுபோதையில் இருந்தார் என்பதை நிரூபிக்க ரசாயன பரிசோதனை அறிக்கையை காப்பீடு நிறுவனம் சமர்பித்துஉள்ளது. அதில் ஷிபுவின் ரத்தத்தில் மது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

எனினும் ரசாயன பரிசோதனை அறிக்கையின் ஆதாரத்தை மட்டும் வைத்து, காப்பீடு உரிமை கோருவதை நிராகரிக்க முடியாது.

ஏனெனில் ரத்தத்தில் ஆல்கஹகால் இருந்தது என்பது மட்டும் போதாது. அது ஓட்டுநரின் சுய உணர்வை பாதித்து விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தது என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

தவிர, அது விபத்துக்கு நேரடி காரணமாக இருந்தால் மட்டுமே காப்பீடு தொகை வழங்குவதை நிராகரிக்கலாம்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *