“புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் பின் ஏற்பட்ட படுகொலைகள் அனைத்துக்கும்  அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அண்மையில் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

2009ஆம் ஆண்டு மே மாதம் 16 தொடக்கம் 18ஆம் திகதி வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இருந்துள்ளனர்.

அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு  அப்போதைய நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத நிலையில் பசில்  ராஜபக்ஷவுடன் பேசுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் என்னுடன் பேசினார்கள்.

எமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த செய்தியை உரிய தரப்பினரிடம் கொண்டுபோய் சேர்க்குமாறு என்னிடம் கோரிக்கை முன்வைத்தார்கள். 

அதன் பிரகாரம், பசில் ராஜபக்ஷவிடம் குறித்த செய்தியை கொண்டுபோய் சேர்த்தேன். 17ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு வருகை தந்ததும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் நான் பேசிய விடயங்கள் தொடர்பில் இணங்கப்படும் என்றார்.

அந்த இணக்கப்பாட்டுடன், மறைந்த மன்னராயர் இராசப்பு யோசப் மற்றும் கிங்சிலி ஆகியோருடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு சென்று மக்களை அழைத்து வர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விடயங்கள் மே மாதம் 16ஆம் திகதி இரவு 8 மணி அளவில் பேசப்பட்டது. 

ஆனால் நிலைமைகள் மாறி  விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் இருந்த மக்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்தது. இதற்கு நானே சாட்சி. 

விடுதலைப் புலிகள் இறுதி நேரத்தில் தான் என்னுடன் தொடர்புகொண்டார்கள். ஏனெனில் அரசியல் கலக்காமல் சில விடயங்களை அவர்கள் கையாள முனைந்திருக்கிறார்கள். அது சாத்தியப்படவில்லை. 

என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க உரிய தரப்பினரிடம் விடயங்களை கொண்டுபோய் சேர்த்தேன். ஆனால் கூறப்பட்ட விடயங்களுக்கு மாறாக இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். 

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் புலிகள் இறுதி யுத்த களத்தில் கூட அப்பாவி  மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை.

அவர்கள் என்னுடன் பேசிய மே 16அம் திகதி தொடக்கம் இறுதி யுத்த களத்தில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான பொதுமக்களுக்கு நானே சாட்சி என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *