ஓமந்தை வேப்பங்குளம் அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திட்ட பகுதியில் பாதையால் கனரக வாகனங்கள் செல்வதால் வீதி சேதமடைந்து வருவதாகவும், வீதியால் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கனரக வாகனங்கள் பயணிப்பதாகவும், வேப்பங்குளம் புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லையென தெரிவித்தும் அப்பகுதி மக்கள் சனிக்கிழமை (11.10.2025) கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடாத்தினர்.

அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்துவருவதுடன் அப்பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உள்ளக மைதான கட்டடத்தொகுதி என்பன உள்ளதால் பெருமளவான மாணவர்கள் வந்துசெல்லும் இடமாகவும் உள்ளது.
இதனையடுத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அவர்களும் விஜயம் செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினர். இதன்போது தமது பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கையளித்தனர்.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில், குறிப்பாக பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை தொடர்பில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் உரிய துறைசார் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும், ஏனைய விடயங்களை அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்த்துவைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து மக்களால் குறிப்பிடப்பட்ட கனரக வாகனங்கள் கல் ஏற்றிச்செல்லும் வேப்பங்குளம் பகுதியிலுள்ள கல்குவாரிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் குவாரியினை ஆய்வுசெய்ததுடன் அதன் உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.
இதன்பிற்பாடு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர், குவாரி உரிமையாளர், பொதுமக்கள் ஆகியோரை இணைத்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
தொடர்ந்து குறித்த பாதையை சீரமைத்துதர கல்குவாரி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்ததுடன் மேலதிக பங்களிப்பினை வழங்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளரும் உறுதியளித்தார் அத்துடன் புகையிரத திணைக்கள அனுமதியுடன் பொதுமக்களின் பங்களிப்புடன் புகையிரத கடவையை பாதுகாப்பான பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.
இதனையடுத்து சேதமடைந்துவரும் வீதியினை அனைவரும் இணைந்து பார்வையிட்டதுடன், மாற்றுப்பாதைகளுக்கான சாத்தியம் பற்றியும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.