வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்தும் இன்று நீர் திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வழக்கத்தை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க இருந்தாலும், தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அந்த வகையில், திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு தற்போது 700 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரியில் திறக்கப்படும் உபரிநீர் தாமரைப்பாக்கம் அணையில் தேக்கி வைத்து சோழவரம் ஏரிக்கு அனுப்பப்பட்ட உள்ளது.
அதேபோல, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான புழல் ஏரியும் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று மதியம் தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.