“தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்” – தமிழக முதல்வர்

சென்னை

கூட்டம் நடந்த இடத்திற்கு தவெக தலைவர் 7 மணி நேரம் கழித்து தான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என சட்டசபை முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

கரூர் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். கடந்த செப்.27ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் இதற்கான அனுமதியைக் கோரி இருந்தார்.

அவர் அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கப்படவில்லை. செப்.25ம் தேதி காலை லைட்ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தைப் பகுதியில் அனுமதி கோரிய மனுவுக்கும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலவில்லை. பின்பு, செப். 25ம் தேதி அன்று அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர், வேலுசாமிபுரத்தில் 27ம் தேதி அன்று மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கோரினார். மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கேட்டதால் வேலுச்சாமி புரத்தில் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 3 கூடுதல் மற்றும் 5 துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 517 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை. செப். 27ம் தேதி அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு 9.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார்.

அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் கழித்து தான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மக்களுக்கு உணவு தண்ணீர் உட்பட எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. பிரசார வாகனத்தை நிறுத்த கரூர் மாவட்ட எஸ்பி பலமுறை கூறியும், அதை நிறுத்தாமல் சென்றனர். போலீசாரின் அறிவுறுத்தலை மீறி, 35 மீட்டர் தூரம் வரை விஜய் வாகனம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. மீட்பு பணிகள் நடந்துக் கொண்டிருக்கும் போதே 2 ஆம்புலன்ஸ் டிரைவர்களை தவெகவினர் தாக்கினார்கள்.

கூட்டம் நடத்தும் கட்சிகள் பொறுப்போடு செயல்பட வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் போல இனிமேல் நடைபெற கூடாது. கட்டுப்பாடுகளை மீறும் போது, பாதிக்கப்படுவது தொண்டர்கள் தான். கரூர் துயரம் அறிந்ததும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக இரவோடு இரவாக கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினேன். அனைத்து உடல்களையும் வைக்க போதிய குளிர்சாதன வசதி இல்லாததால் இரவோடு இரவாக உடற்கூராய்வு செய்யப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்யும் பணி நள்ளிரவு 1.41 மணிக்கு தொடங்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *