வெலிக்கடையில் குட்டிமணி உட்பட 53 பேர் படுகொலை – 42 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை.

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலைச் சம்பவம், கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடு அல்லது கலவரம் கிடையாது; மாறாக, இது ஒரு வாரத்துக்கு முன்பே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மருமகனும், இராணுவ தளபதியுமான திஸ்ஸ வீரதுங்கவினால் திட்டமிடப்பட்ட படுகொலை நிகழ்வு என சிங்கள எழுத்தாளரும், முன்னாள் ஊடகவியலாளருமான நந்தன வீரரட்ன யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம்பெற்ற “கறுப்பு ஜூலையின் 7 நாட்கள்” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

திட்டமிட்ட படுகொலையின் பின்னணி:

ஊடகவியலாளர் நந்தன வீரரட்ன மேலும் தெரிவிக்கையில், தாம் அக்காலப் பகுதியில் வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதம சிறைக்காவலரை நேரடியாகச் சந்தித்து வாக்குமூலம் பெற்றதன் மூலம் இந்த உண்மைகளை அறிந்ததாகக் குறிப்பிட்டார்.

• பழிவாங்கல் திட்டம்: 1983 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் பூதவுடலை கொழும்புக்கு எடுத்துச் சென்று கலவரத்திற்கான திட்டத்தை ஜே.ஆர். வகுத்தார்.

• வீரதுங்கவின் தோல்வி: 1981 இல் “பயங்கரவாதத்தை அழிக்கும்” நோக்குடன் ஜே.ஆர். அவர்களால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட திஸ்ஸ வீரதுங்கவினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. அதற்குப் பழிவாங்கும் நோக்குடன், வட மாகாணத்தில் பல்வேறு இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களை வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டுவருமாறு உத்தரவு வழங்கப்பட்டது.

• பணயமாக வைக்கப்பட்ட கைதிகள்: நன்கு திட்டமிட்டபடி, தண்டனை பெற்ற சிங்களக் கைதிகளைப் பணயமாக வைத்து, அவர்களுக்கு விடுதலை தருவதாகக் கூறி குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

• விடுவிக்கப்பட்ட கொலைகாரர்கள்: இந்தப் படுகொலையுடன் தொடர்புபட்ட அத்தனை சிங்களக் கைதிகளும் சிறையில் இருந்து ஜே.ஆர். அரசாங்கத்தினால் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு கருதி 40 வருடங்கள் காத்திருப்பு:

இந்த உண்மைகள் அனைத்தும் அறிந்திருந்தும், பொது வெளியில் எழுதுவதற்குத் தனக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் 40 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என நந்தன வீரரட்ன மனம் திறந்தார்.

“அநேகமானவர்கள் இன்றும் 1983 வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுதான் இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

“கறுப்பு ஜூலையின் 7 நாட்கள்” நூல்:

இவர் எழுதிய “கறுப்பு ஜூலையின் 7 நாட்கள்” என்ற நூலில், கறுப்பு ஜூலையின் சூத்திரதாரிகள் யார், யாருக்காக தமிழ் மக்களைக் கொன்றொழித்தார்கள், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டார்கள் போன்ற பல புலனாய்வுத் தகவல்களை ஆதாரத்துடன் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

• “83 கலவரத்துடன் தொடர்புபட்ட இருவர் இன்றும் உயிருடன் உள்ளார்கள். அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். மறுக்க விரும்பினால் இந்த அரசாங்கத்தில் அவர்கள் மறுக்க முடியும்,” என்றும் சவால் விடுத்துள்ளார்.

சிங்கள மக்களுக்கான உண்மைகள்:

இதேவேளை, இவர் எழுதிய “யாழ்ப்பாண தீயிடல்” என்ற நூலை சிங்கள மொழியில் வெளியிட்டதன் மூலம், யாழ்ப்பாணப் பொது நூலகம் ஏன், யாரால் எரிக்கப்பட்டது என்ற உண்மை பல சிங்கள மக்களுக்குத் தெரியவந்தது என்றும், அந்த நூல் ஒரு மாதத்தில் பத்தாயிரம் பிரதிகள் விற்பனையாகியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இனியாவது இந்த உண்மைகள் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த நூலை இரு மொழிகளிலும் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கறுப்பு ஜூலையின் கொடூரங்கள்:

1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பித்த தமிழ் மக்களுக்கு எதிரான இனக் கலவரம் ஏழு நாட்கள் நீடித்தது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொன்று வீசப்பட்டார்கள். கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழ் வர்த்தகர்களுடைய கடைகள், வீடுகள் தீயிட்டு அழிக்கப்பட்டன. இந்த வெறியாட்டத்தின் பின்னர், சிங்கள ஊடகங்களுக்கு முன் தோன்றிய ஜே.ஆர். “உங்கள் ஆயுதங்களைக் கீழே வையுங்கள்” என்று கூறியிருந்தார். அக்காலப் பகுதியில் தெற்கு ஊடகங்கள் ஜே.ஆர் இன் கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையால் உண்மைச் செய்திகள் திரிவுபடுத்தி வெளியிடப்பட்டன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *