அமெரிக்காவிற்கான அனைத்து வகையான அஞ்சல் சேவைகளும் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டதாக இந்திய மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க சுங்கத்துறை சில மாதங்களுக்கு முன் புதிய சுங்க வரி வசூல் விதிகளை அறிவித்தது. இதன் படி, அமெரிக்காவுக்கு தபால் மூலம் வரும் பார்சல்கள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட நாட்டிலேயே முன்கூட்டியே சுங்கக் கட்டணம் வசூலித்து, அமெரிக்க சுங்கத்துறைக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

முன்பு அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்பும்போது அமெரிக்க சுங்கத்துறைக்கு தேவையான வரி விபரங்கள் முன்கூட்டியே அனுப்பப்படவில்லை. அதனால், அமெரிக்காவுக்கு பொருள் வந்ததும், அங்குள்ள அதிகாரிகள் அதை நிறுத்தி வைத்து பெறுபவரிடமிருந்து வரி வசூல் செய்ய வேண்டியிருந்தது. இதனால் தாமதம் ஏற்பட்டது.

அதற்கான கணினி அமைப்பு நம் தபால் துறையில் தயாராகாமல் இருந்தது. மேலும், சுங்க வரி கணக்கீட்டிலும் குழப்பம் நிலவியது. தற்போது அந்த பிரச்னைகள் சரி செய்யப்பட்டு உள்ளன. அமெரிக்காவின் புதிய வரிமுறைக்கு ஏற்ப நம் தபால் துறை கணினி அமைப்பில் மாற்றம் செய்துள்ளது.

இந்தப் புதிய முறையின் கீழ், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் பொருட்கள் மீதான சுங்க வரிகள் முன்பதிவு செய்யும் போது, இந்தியாவில் முன்கூட்டியே வசூலிக்கப்பட்டு, அமெரிக்க சுங்கத்துறைக்கு நேரடியாக அனுப்பப்படும்.

எனவே வாடிக்கையாளர்கள் இனி அனைத்து வகையான தபால்களையும் அஞ்சலகங்கள், சர்வதேச வணிக மையங்கள், அஞ்சல் அலுவலக ஏற்றுமதி மையம் அல்லது ‘இந்தியா போஸ்ட்’ இணையதளம் வாயிலாக அமெரிக்காவிற்கு முன்பதிவு செய்யலாம் என, தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *