ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36’வது பொது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36’வது பொது பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை (15.10.2025) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) மற்றும் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோர் வரவேற்றனர்.
அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பு கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த மொத்தம் 1883 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் மற்றும் முதுகலை டிப்ளோமாக்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், இறுதி அமர்வில், 155 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், விசேட திறமை எய்திய மாணவர்களுக்கு பிரதி அமைச்சரால் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு), பட்டதாரிகளின் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார்.
தேசத்திற்கான சேவையில் தங்கள் அறிவை பொறுப்புடன் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டதுடன் கல்வி, புத்தாக்கம் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு இடையிலான முக்கிய தொடர்பை அவர் வலியுறுத்தினார். ‘அறிவு ஒரு சக்தி, ஆனால் அறிவு மனிதகுலத்திற்கும் தேசிய முன்னேற்றத்திற்கும் சேவை செய்யப் பயன்படுத்தப்படும்போது மட்டுமே சக்தி வாய்ந்ததாக மாறும்’ என்றும் கூறினார்
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்த பிரதி அமைச்சர், இலங்கையை அறிவு சார்ந்த பொருளாதாரமாக மாற்ற வடிவமைக்கப்பட்ட வரவிருக்கும் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையின் மூலம் கல்வி முடிவுகளை தேசிய முன்னுரிமைகளுடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
பட்டதாரிகள் நேர்மை, தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்கத்துடன் பணியாற்றுவதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்க வேண்டும் என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மை தேசிய பாதுகாப்பின் அடித்தளம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டி அவர் அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்வில் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், இராஜதந்திரிகள், முன்னாள் வேந்தர்கள் மற்றும் உபவேந்தர்கள், முனுருவின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.