சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனா மீது அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டது. ஆனால் தனது நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பொறுத்துக் கொள்ளாது. சீனா எங்களை மிகவும் மதிக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் 55 சதவீத வரிகளை செலுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இது நிறைய பணம். தற்போது அவர்களுக்கு புதிய வரிகளை விதிக்கலாம்.

அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1ம் தேதி முதல் சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்கா புதிய ஏற்றுமதி தடைகளை விதிக்கும்.

மலேசியாவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் பல நாடுகள் அமெரிக்காவை சாதகமாக பயன்படுத்திக் கொண்டன, ஆனால் அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அவர்களால் இனி சாதகமாகப் பயன்படுத்த முடியாது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

மேலும், அதிபர் டிரம்ப் கூறியதாவது: இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை ஹமாஸ் நிலைநிறுத்த வேண்டும். நல்லவராக இருங்கள் இல்லையெனில் நீங்கள் அழிக்கப்படுவீர்கள். வன்முறை விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.

வன்முறை குறையும் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கும். ஆனால் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தினால் பதிலடி கொடுப்போம். ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைவதாக உறுதியளித்தது. ஆனால் காலக்கெடு நிர்ணயிக்கப் படவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால், நாங்கள் அதைச் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *