இரு நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு இந்தியாவை தொடர்புபடுத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ள ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். ஒரு சில நாட்கள் நடந்த மோதல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால் ஆப்கன் – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட தாக்குதல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், ” இந்தியாவின் மடியில் அமர்ந்து கொண்டு ஆப்கானிஸ்தான், எங்களுக்கு எதிராக செயல்படுகிறது,” எனக்குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் தனது சொந்த தோல்விகளை மற்ற நாடுகள் மீது சுமத்துவதாகவும், ஆப்கானிஸ்தான் இறையாண்மை மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் மவ்லாவி முகமது யாகூப் முஜாகித் கூறுகையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எங்களின் பிராந்தியத்தை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை எங்கள் கொள்கை ஆதரிக்காது. ஆப்கன், சுதந்திரமான நாடு என்ற முறையில் இந்தியாஉடன் உறவை பராமரிக்கிறோம். எங்கள்நாட்டின் நலன் அடிப்படையில் உறவை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.