“உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களும் அஞ்சேன்” – ரவிகரன் எம்.பி

வவுனியா

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமக்கு விடுக்கப்படுகின்ற இவ்வாறான மிரட்டல்களுக்கும், உயிர் அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அஞ்சப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீகபகுதியான திரிவச்சகுளம் மற்றும் அதனை அண்டியபகுதிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுதை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றார்.

இந்நிலையில் குறித்த திரிவைச்சகுளம் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பதுடன், அதனை அண்டியபகுதிகளில் பாரிய அடர்வனங்களை அழித்து சட்டவிரோத ஆக்கிரமிப்பு செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்ற பெரும்பான்மை இனத்தைச்சார்ந்த ஒருவர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது பெயரைக்குறிப்பிட்டு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் அண்மையில் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போது, குறித்த அச்சுறுத்தல் சம்பவத்தை மேற்கோள்காட்டி மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் மக்களுக்கான சேவையில் முழுமையாக செயற்பட்டுவருகின்றோம். அந்தப் பணியைத்தான் கட்சி எமக்குத் தந்துள்ளது.

எனவேதான் எமது மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிவதற்காக நாம் ஆழ்கடலுக்கும் செல்கின்றோம். இதுதவிர எமது வயல்கள்,ஆறுகள், குளங்கள், காடுகள், கிராமங்கள் என அனைத்து இடங்களுக்கும் சென்று எமது மக்களுடைய குறைபாடுகள் மற்றும் சிக்கல் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து அவற்றைத் தீர்த்துவைப்பதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.

அந்தவகையிலேதான் வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக திரிவச்சகுளம் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை மற்றும் அதனை அண்டிய பாரிய அடர்வனங்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமான முறையில் அழிக்கப்பட்டு அபகரிப்புச் செய்யப்படுகின்றமை தொடர்பான விவகாரத்தில் தலையீடுசெய்து, அந்த அபகரிப்பு முயற்சிகளைத் தடுக்கின்றவிதமாகச் செயற்பட்டிருந்தேன்.

இந்நிலையில் அங்கு எமது தமிழ் மக்களின் பூர்வீக திரிவைச்சகுளம் வயல்நிலங்களை ஆக்கிரமித்து, அதனை அண்டிய பகுதியில் சட்டவிரோத காடழிப்பினை மேற்கொள்ளும் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவர் எனது பெயரைக்குறிப்பிட்டு எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் கருத்துக்களைக் கூறியதாக சிலர் என்னிடம் கூறினர். அத்தோடு குறித்த பெரும்பான்மை இனத்தவர் எனது பெயரைக்குறிப்பிட்டு உயிர் அச்சுறுத்தல் விடுக்கின்ற காணொளிகளையும் என்னிடம் சிலர் காண்பித்துள்ளனர்.

இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் விடுக்கின்ற குறித்த பெரும்பான்மை இனத்தவர் என்னைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் அவ்வாறு கருத்துவெளியிட்டிருக்கின்றார் என நினைக்கின்றேன்.

நாம் செல்லவேண்டிய அனைத்து இடங்களுக்கும் செல்வோம். எவரும் இவ்வாறு உயிர் அச்சுறுத்தல்களை விடுக்கின்ற விதமாகச் செயற்பட்டு எம்மைக் கட்டுப்படுத்த முடியாது.

இந்த இடங்கள் அனைத்தும் எமது தமிழ்மக்களுடைய பூர்வீக பகுதிகளாகும். இந்த இடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்குரிய இடங்களில்லை. எனவே வடக்கு,கிழக்கு பூர்வீக தமிழர்தாயகம் என்கின்ற வகையில் எமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துக்கொண்டேயிருப்போம். நாம் இங்கு வெறுமனே வீரவசனங்களைப் பேசிக்கொண்டிருக்கவில்லை. தொடர்ந்தும் ஓய்வின்றி மக்களுகாகான்சேவைகளைச் செய்துகொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக நான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். எனவே மக்கள் எனக்களித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என்னால் இயலுமான முழுமையான சேவையை மக்களுக்கு வழங்கிவருகின்றேன்.

இவ்வாறிருக்க இவ்வாறான உயிர் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் நாம் எதற்காகப் பயப்படவேண்டும்.

கடந்தகாலத்தில் “சைனட்” குப்பிகளுடனேயே எமது இளைஞர்களும், யுவதிகளும் எமது உரிமைக்காகப் போராடினார்கள். அவ்வாறிருக்கும்போது எமது உரிமைகளைப் பெறுவதற்காக நாம் ஏன் பயப்படவேண்டும்.

இந்நிலையில் தற்போதும் எமது மக்களின் உரிமைக்காக நாம் ஜனநாயக முறையில் அரசியல் ரீதியாக போராடும்போது எம்மீது இவ்வாறாக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. அதற்கு நான் பயப்படப்போவதில்லை. எமது மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் தொடர்ந்தும் போராடுவதுடன், எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்.

ஏன் எனில் எமது மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, இந்த நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றிற்கு என்னை அனுப்பிவைத்துள்ளார்கள். ஆகவேதான் பாராளுமன்றில் எனது மக்களுக்காக பேசிக்கொண்டிருக்கின்றேன். தொடர்ந்தும் எனது மக்களுக்காக பாராளுமன்றில் பேசுவேன். எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை உரிய இடங்களுக்கு கொண்டுசென்று எமது மக்களின் கோரிக்கைகளையும், தேவைப்பாடுகளையும் நிறைவேற்றுவதுடன், எமது மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்.

இவ்வாறான உயிர் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *