திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத சிற்றூண்டிச் சாலை அகற்றும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு
திருகோணமலை
திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத சிற்றூண்டிச்சாலையை, செவ்வாய்க்கிழமை (04.11.2025) கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளத் திணைக்களத்தினர் உடைத்து அகற்ற சென்ற போது, அதனை அண்மித்து உள்ள பெளத்த வணக்க தலத்தின் பிக்குவினது தலையீட்டை அடுத்து 7 தினங்களுக்கு உடைத்து அகற்றும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது.

திருகோணமலை பிரடெரிக் கோட்டை வீதியின்”டச்பே”கடற்கரையில் தனிப்பட்ட ஒருவரால் சில ஆண்டுகளுக்கு முன்னர் இவ் சட்டவிரோத சிற்றூண்டிச்சாலைக் கட்டுமானம் அமைக்கப்பட்டது.
தற்காலிக நிர்மாணம் ஒன்றை அமைப்பதற்கே அப்போது தமது திணைக்களம் அனுமதி வழங்கியது. ஆனால் சிற்றூண்டிச்சாலையை அமைத்தவர் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட அதிக அளவில் சில கட்டுமாணங்களை நிரந்தரமாக அமைத்துள்ளார். அத்துடன் சுற்றிலும் பொது மக்கள் கடற்கரைக்கு இலகுவாக செல்வதை தடுத்து வேலி அமைத்துள்ளார்.
இதற்கு எம்மிடம் அனுமதி பெறப்படவில்லை. இந்நிலையில் இவ் சட்ட விரோத கட்டுமானத்தை நீக்க நாம் தீர்மானித்தோம். அதனை அடுத்து கட்டிடம் அதனை அமைத்தவரால் உரிய காலத்தில் அகற்றப்பட வேண்டும், அல்லது எமது திணைக்களம கட்டிடத்தை இடித்து அகற்றும் என்ற உத்தியோகபூர்வ முன்னறிவித்தல் சென்ற ஆவணி மாதம் 12 ஆம் திகதி கட்டிடத்தின் பிரதான வாசலில் எமது அதிகாரிகளால் ஒட்டப்பட்டது.
எனினும் உரியவரால் கட்டுமானம் அகற்றப்படவில்லை. இந்நிலையில் கட்டிடத்தை அகற்ற முற்பட்ட போது, பெளத்த குருவானவர் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளாதாக எமக்கு பொலிஸார் அறிவித்தல் தந்தனர். அதற்கிணங்க பொலிஸ் நிலையத்தில் வைத்து எமது திணைக்களத்திற்கும் பெளத்த குருவிற்கும் இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதன் போது எமது திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அமைச்சின் செயலாளர் உடன் கலந்துரையாட தனக்கு 7 வேலை நாட்கள் கொண்ட அவகாசம் தருமாறு பெளத்த குரு வேண்டுகோள் விடுத்தார். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இதனால் உடனடியாக உடைத்து அகற்றும் செயற்பாடு பிற்போடப்பட்டுள்ளது.
ஆனால் 7 நாட்களுக்குள் குருவானவரால் தொடர்நது இவ்விடத்தில் சிற்றூண்டிச்சாலை நடத்துவதற்குரிய அனுமதி பெற்றுக்கொள்ளப்படாது விட்டால் 8 வது நாள் நாம் முழு கட்டுமானத்தையும் முழுமையாக உடைத்து அகற்றுவோம்” என்று கரையோரப்பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வளத்திணைக்களத்தின் திருகோணமலை பிராந்திய பொறுப்பதிகாரி,பொறியியலாளர் முருகையா துளசிதாசன் ஊடகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதே வேளை இக்கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ள கடற்கரைப்பகுதி தமது பெளத்த வணக்கத் தலத்திற்குரிய பூஜா பூமி என்றும்,அதற்குரிய அரச உத்தியோகபூர்வ ஆவணம் தம்மிடம் உள்ளது என்றும்,வணக்க தலத்தின் அபிவிருத்திக்கு இந்த சிற்றூண்டிச்சாலையின் வருமானம் பயன்படுத்தப்படுகின்றது என்றும் வணக்க தலத்தின் பெளத்த பிக்கு கூறினார்.
இதேவேளை, இவ் கட்டுமானம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இது திருகோணமலை மாநகரசபைக்குரியது,எனவே இதனை அகற்றுவது குறித்து மாநகர சபையினால் நீதிமன்றத்தில் வழக்கொன்று பதிவு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.இறுதி தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது.