எல்லைகளைக் கையகப்படுத்த மத அடையாளங்களைப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது – கனடியத் தமிழர் பேரவை 

சட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்துவதையும், எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கண்டனம் வெளியிட்டுள்ள கனடியத் தமிழர் பேரவை, இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் முடிவுக்குக் கொண்டுவந்து சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கனடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையில் பௌத்தம் எனும் போர்வையில் திருகோணமலையில் பதிவாகியிருக்கும் குண்டர் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஒடுக்குமுறை மற்றும் வலுகட்டாயத் திணிப்புடன்கூடிய இந்நடவடிக்கை அப்பிராந்தியத்தில் பல தலைமுறைகளாக வாழும் தமிழ் மற்றும முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், பதற்றத்தையும் தோற்றுவித்துள்ளது.

அப்பகுதி மக்களின் வலுவான எதிர்ப்புக்கு மத்தியிலும் சட்டவிரோத நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பேற்படுத்தி உதவும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த கரிசனை கொள்கின்றோம். தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை விதைக்கக்கூடிய இவ்வாறான செயற்பாடுகள், இலங்கையில் சிறுபான்மையின மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்பட்டுவதை மீளுறுதிப்படுத்துகின்றது.

சட்டவிரோத நிர்மாணப்பணிகளை ஆதரித்தல், சட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்தல் மற்றும் எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதுடன், இன ரீதியான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி, அர்த்தமுள்ள நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நம்பிக்கையில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட விகாரைக்கு அருகாமையில் உள்ள காணியில் சட்டவிரோத நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதை உடன் நிறுத்துமாறு அவ்விகாரையின் விகாராதிபதிக்கு சுற்றாடல் அமைச்சு கடந்த ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறிருந்தும் சுற்றாடல் அமைச்சின் அறிவுறுத்தலுக்குப் புறம்பாக நிர்மாணப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன், புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கான ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் தமது அறிவுறுத்தல்களை உரியவாறு அமுல்படுத்துமாறும், சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி இவ்விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், திருகோணமலை உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் வாழும் சிறுபான்மையின மக்களின் உரிமைகள், கௌரவம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply