தேசத்தின் இறப்பு பிறப்பாகிறது
24-11-2025 | பரணி கிருஸ்ண ரஜனி
வரலாற்றில் எந்த போரில் பெரும் உயிர் தியாகங்களுடன் ஓர் இனம் தனது இறையாண்மையை, சுயநிர்ணய உரிமையை இழக்கிறதோ, அந்த இழப்புதான் அவர்களின் தேசத்தின் பிறப்பாகிறது. ஏனென்றால் அங்குதான் ஒரு தேசத்தை கட்டியமைக்கத் தேவையான தியாக வரலாறு உருவாகிறது. அது அவர்களின் முதன்மை அடையாளமாகிறது. இது முரணாகத் தோன்றலாம், ஆனால் இதுதான் உலகில் பல தேசிய வரலாற்றில் ஏற்படும் நிகழ்வு அந்தப் போரின் முக்கியமான தியாகி தேசத்தின் குறியீடாகிறார்.

It may seem counterintuitive to propose that a nation’s defeat and its foundation could occur in the same symbolic moment. Still, such is the nature of ambivalence and the mechanisms for resolving it.
2009-இல் என்று பேரழிவு ஏற்பட்டதோ, அன்றுதான் தமிழகத்தில் திராவிடத்தின் பிடியை உடைத்துக்கொண்டு தமிழ்த்தேசியம் ஒரு புதிய பிறப்பெடுத்தது. இதுதான் இறப்பில் பிறப்பு என்பது. இரத்த தியாகம் தேசிய உணர்வுக்கான அடிப்படை என்பதால், பாரிய இழப்பு ஒரு தேசிய உணர்வைத் தூண்டி மக்களை ஒன்று சேர்க்கிறது.
உதாரணமாக பிரான்சுக்கு சோன் ஆஃபு ஆர்க்கு (Joan of Arc), இசுரேலுக்கு மசாதா (Masada), சேர்பியாவுக்கு கொசோவோ போலெ (Kosovo Polje, நவீன கிரேக்கர்களுக்கு கான்சுடண்டினோ போல் வீழ்ச்சி (Falll of Canstantinopol), செக்கோசுலோவாகியாவுக்கு வெள்ளைமலைப் போர் (Battle of White Mountain), குபேக்கிற்கு(Quebec) Plains of Abraham, கட்டலோனியாவிற்கு (Catalonia) பார்சிலோனா வீழ்ச்சி (Fall of Barcelona), கானாவிற்கு (Gana) Nana yaa Asantewa.
அந்த இழப்பை தேசம் பின்வருமாறு கட்டியமைக்கிறது. ஒருவர் (அல்லது சிலர்)
*தேசத்தின் குறியீடாக நிற்பார்
*வீழ்வோம் என்று முன்கூட்டியே தெரிந்தும் தேசத்திற்காக வீரமரணம் அடைவார்
*இறப்பு உறுதியாயினும் அதியுச்ச வீரத்துடன் போர்புரிவார்.
*அவருக்கு நெருங்கியவர்களாலோ அல்லது அவரின் சமூகத்திலிருந்து சிலர் துரோகம் செய்வார்கள்.
*அதன் விளைவாக முக்கியமான வெளி சக்திகளால்/ எதிரிகளால் கொல்லப்படுவார்.
*இறுதியில் இறைவனாலயோ ( இயற்கை) அல்லது கூட்டு சமூக தியாகத்தாலோ அதே எதிரிகள் அழிக்கப்படுவார்கள்.
*அவர்தான் தேசத்தின் ஆன்மா. அந்த ஆன்ம பலத்துடன் தேசம் இழந்ததை மீட்கும், எக்காலத்திலும் யாராலும் அழிக்க முடியாதபடி தொடரும்.
ஒரு தேசம் தான் இழந்த இறையாண்மையை வென்றெடுக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு தேசியமும் பின்பற்றும் உளவியல் இதுதான். இதை “தியாக உளவியல்” என்போம். ஒவ்வொரு தேசத்திற்கும் இது வெவ்வேறு வடிவமெடுக்கலாம். பெரும்பாலான தேசங்களுக்கு உண்மையான வரலாறு இல்லாததால், கட்டுக் கதைகளை உருவாக்கி தேவைகளை நிரப்புகிறார்கள். ஆனால் நமக்கு இது உண்மை வரலாறு.
2009-இல் தமிழர் தேசம் அதுபோன்ற அழிவை சந்தித்திருக்கிறது. பெரும்பாலான தமிழ்த்தேசியர்கள் இயற்கையாக தோன்றிய மேற்கூறிய உளவியலை ஏற்கனேவே உள்வாங்கி தலைவரை வழிகாட்டியாக, அடையாளமாக, தேசிய ஆன்மாவாகக் காண்கிறார்கள், ஆனால் சில முக்கிய கூறுகளை நாம் இன்னும் உள்வாங்கவில்லை.
போர் இலக்குகளை அடையாவிட்டாலும், போராளிகள் இறுதிவரை நின்று தியாகம் செய்தது என்பது அறநெறி வெற்றி (moral victory). அவ்விடம்தான் தேசத்தின் பிறப்பிடம். அது நமது முக்கிய அடையாளம். இது கொண்டாடப்பட வேண்டியது. ஆனால் அன்று நடந்த இனவழிப்பை முதன்மையாக எடுத்துக்கொண்டு அந்நாளை முழுமையான துக்க தினமாக மாற்றிவிட்டோம். சிலர் இனவழிப்பை தங்களின் அடையாளம் என்றும் கூறுகின்றனர். உலகில் எந்த இனமும் இனவழிப்பை தங்களின் அடையாளமாக எடுத்துக்கொள்வதில்லை.
அது நினைவுகூரப் படவேண்டிய விடயம், ஆனால் அது அடையாளம் ஆகாது. யூதர்களுக்கு மசாதா அடையாளம், கிட்லர் நடத்திய இனவழிப்பு அல்ல. புலிகள் இறுதிவரை நின்று போர் புரிந்தது நின்ற இடம் நமது அடையாளம். அதை நந்திக்கடல் என்று அடையாளப்படுத்தி அதை முக்கியமான அடையாளமாகப் பார்க்கவேண்டும்.
பிரபாகரன் சிந்தனைப் பள்ளி