காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் “மரண தண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷவை” மீண்டும் சந்திக்க அனுமதி கோரியுள்ளனர்.

24-11-2025 | கொழும்பு –

காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் மரண தண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டுமொருமுறை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருப்பதாகவும், அனுமதி கிட்டும் பட்சத்தில் எதிர்வரும் 26 ஆம் அல்லது 27 ஆம் திகதி இச்சந்திப்பு இடம் பெறுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஊடாக 09.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் இழைத்த குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்படல்க்ள, மனிதப்புதைகுழிகள் மற்றும் அவற்றுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களின் பெயர் விபரங்கள் உள்ளிட்ட சகல உண்மைகளையும் வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷ அறிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி இந்த உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சத்தியக்கடதாசி வழங்குவதற்கும் அவர் இணங்கியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் தொடர்புடைய சில உண்மைகளையும், எதிர்வருங்காலங்களில் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராக உள்ள விடயங்களையும் உள்ளடக்கி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்ஷ தனது சட்டத்தரணி முன்னிலையில் சத்தியக்கடதாசி வழங்கியிருந்தார்.

அந்த சத்தியக்கடதாசியின் ஒரு பிரதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் மேலும் இரு பிரதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடமும், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடமும் கையளிக்கப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்தவிடம் இம்மாதத் தொடக்கத்தில் வினவியபோது, மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவேண்டியிருப்பதாகவும், இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் (நடைபெற்றுமுடிந்த) தமது அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டுத் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்றுமுடிந்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இச்சத்தியக்கடதாசி தொடர்பான விடயம் ஆராயப்படவில்லை எனவும், கடந்த ஒகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் அதுபற்றிய முழுமையான விபரங்கள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னரே இவ்விவகாரம் ஆராயப்படும் எனவும் அலுவலக வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

அதுமாத்திரமன்றி அலுவலக அதிகாரிகள் மீண்டுமொரு முறை சோமரத்ன ராஜபக்ஷவைச் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருப்பதாகவும், அனுமதி கிட்டும் பட்சத்தில் எதிர்வரும் 26 ஆம் அல்லது 27 ஆம் திகதி இச்சந்திப்பு இடம்பெறுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

Leave a Reply