அறிவுச் சமூகமாக மீள் கட்டமைப்பைப் பெரும் தமிழ்ச் சமூகம் கட்டமைக்கும் மீட்பர் அண்ணன் சீமான்! – தமிழம் செந்தில்நாதன்.
24-11-2025 | தமிழகம் –
நேற்று “கூத்தன் குழி” என்கின்ற இடத்தில் “கடலம்மா மாநாடு” நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பாக மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் உடைய சூழலியல் சார்ந்த முன்னெடுப்புகளாக கருதப்படுகின்ற ஆடு மாடுகளுக்கான மாநாடு, மரங்களுக்கான மாநாடு, மலைகளுக்கான மாநாடு, இதனைத் தொடர்ந்து திருவையாறு சட்டமன்றத் தொகுதி சார்பாக “தண்ணீர் மாநாடு” மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நேரடியாக சென்று கலந்து கொள்வது மட்டுமின்றி தண்ணீர் மாநாட்டினை முன் நின்று நடத்தும் வரலாற்று பெருமை பெற்றதில் மகிழ்ச்சி. தண்ணீர் மாநாடு முடிந்து, சரியாக ஆறாவது நாள் கடலம்மா மாநாடு நடந்தமையால், தண்ணீர் மாநாட்டில் பிற்பகுதியில் இருந்த உடல் சோர்வினால் கடலம்மா நாட்டுக்கு செல்வது கடினம் என்று நினைத்திருந்தேன். இருந்த பொழுதும் அண்ணன் சீமான் அவர்களுடைய உரையை நேரலையில் காண்பதை விட , நேராகக் காண்பது எப்போதும் பிடித்தமான ஒன்று என்பதன் அடிப்படையில், கடினப்பட்டு கடலம்மா மாநாட்டுக்கு சென்று இருந்தேன்.
என்னுடைய ஊரில் இருந்து 430 கிலோமீட்டர் என போக வர 860 கிலோ மீட்டரை கடக்க வேண்டியதாயிற்று. அண்ணன் சீமான் அவர்களுடைய கடலம்மா மாநாட்டினுடைய உரையைக் கேட்ட பிறகு, ஒரு காலத்தில் அறிவும் அறிவியலும் ஒருங்கே பெற்ற ஒரு சமூகம் மெல்ல மெல்ல மீட்டுருவாக்கப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிந்தது.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாத கடைசி வாரத்தில் UNIVERSITY OF JERUSALEM என்ற பல்கலைக்கழகத்தில் PLANING AND BUDGET COMMITTEE (PBC) ஆய்வாளராக ஜெருசலம் ஆய்வகத்தில் பணிபுரிந்த நேரம். அதிகாலை அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.
அந்த மின்னஞ்சலில் “இந்த பல்கலைக்கழகத்தின் BPC விருதின் கீழ் பணிபுரியும் ஆய்வாளர்கள் அனைவரும் காலை 10 மணி அளவில் கல்லூரியினுடைய பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட வேண்டும், அங்கிருந்து சிறப்பு பேருந்து வழியாக Weizmann Institute of Science conference Hall லில் இன்று மதியம் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ADA E Yonath, இஸ்ரேலினுடைய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியாவினுடைய இஸ்ரேல் தூதரக அதிகாரி, இஸ்ரேலினுடைய சீனா தூதரக அதிகாரி மற்றும் இஸ்ரேலினுடைய கல்வித் துறை அமைச்சர் இவர்கள் முன்னிலையில் ஒரு கருத்தரங்கு இருக்கிறது” என்று அந்த மின்னஞ்சலில் விவரிக்கப்பட்டது
குறித்த நேரத்தில் அரங்கில் சென்று அமர்ந்தோம். அப்பொழுது PBC இஸ்ரேல் நிர்வாக இயக்குனர் பேசத் தொடங்கினார்.
அவர் பேசும் பொழுது “குறிப்பாக இந்த விருதானது, இந்தியாவில் இருந்தும் சீனாவில் இருந்தும் வருகின்ற ஆய்வாளர்களுக்கு, இஸ்ரேல் அரசாங்கம் கொடுப்பதற்கு மிக முக்கிய காரணம் இன்னும் 20 வருடம் கழித்து, இந்த விருதின் கீழ் ஆய்வு பணிகளை மேற்கொள்கின்ற உங்களில் யாரேனும் தன்னுடைய சொந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட தகுந்த உயரத்தில் ஆய்வாளராகவோ அல்லது மதிப்பு மிக்க ஆய்வுத்துறை நிபுணர்களாகவோ இருப்பீர்கள். அந்த நேரத்தில் இஸ்ரேலிடமிருந்து வருகின்ற ஆய்வு ஒப்பந்தங்களுக்கு எந்தவித மறுப்பும் கூறாமல் செவி சாய்க்கக் கூடிய ஆய்வாளராக நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்தியாவிலிருந்தும், சீனாவில் இருந்தும் வரும் உங்களுக்கு இந்த விருதானது கொடுக்கப்பட்டு ஆய்வுக்கு பணிக்கப்பட்டு இருக்கின்றது” என்று விவரித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Ada E Yonath அவர்கள், “எதிர்காலத்தின் மீது உங்களுக்கு இருக்கின்ற அக்கறை போற்றத்தக்கது. அதே நேரத்தில் இஸ்ரேலில் மருத்துவத்துறைக்கான மருத்துவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது எனவே இஸ்ரேல் அரசாங்கம் மருத்துவர்களை இறக்குமதி செய்து மருத்துவத்தை மேம்படுத்த வேண்டுகிறேன்” என்று மேடையிலேயே சொல்ல அந்த அரசானது அதை ஏற்றுக் கொண்டு அமல்படுத்தியது.
இங்கே இங்கே இந்த நிகழ்வை சொல்வதற்கு மிக முக்கிய காரணம், 20 வருடம் கழித்து தன்னுடைய ஆய்வு ஒப்பந்தத்திற்கான இசைவை தெரிவிப்பதற்கு 20 வருடத்திற்கு முன்னதாகவே அந்நாட்டு ஆய்வாளர்களை தன் வசப்படுத்துகின்ற இஸ்ரேலின் முயற்சியை பாராட்டுவதோடு அவர்கள் எதை நோக்கி நகர்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இங்கே செய்திக்கு வருவோம்..
அரசியல் என்பது வெறும் மனித வாழ்க்கைக்கானது. மனிதன் இன்பமாக வாழ்ந்து, அந்த இன்பத்திற்காக எதை வேண்டுமானாலும் அழித்து இறுதியில் இறந்து போவது என்று அடிப்படை இல்லாத பொதுப்புத்தி இருக்கின்ற இந்த சூழலில், இன்னும் நூறு வருடம் கழித்து, இந்த இனம் எவ்வாறு வாழ வேண்டும் என்ற கனவை சுமந்த ஒரு தலைவனாக அண்ணன் சீமான் அவர்களை பார்க்கிறேன்.
நிகழ்காலத்தில் அரசியல் என்பது மக்களின் வாக்கை பெற்று அதிகாரத்தை அடைவதற்கான வழி என்று தவறாக புரிந்துகொள்ளப்டிருக்கும் வேளையில், இவற்றையெல்லாம் தாண்டி, இந்த இனமட்டுமல்ல, பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் வாழ்வியலோடு தொடர்புடையது என்பதை இந்த மாநாடுகளை விட வேறு எப்படி கூறிவிட முடியும் ? என்ற கேள்வியே மிஞ்சுகிறது.
அரசியல்வாதிகளை பொறுத்தவரை இங்கே.. ஆடுகேமாடுகள் விற்பனை பொருளாக பார்க்கப்படுகிறது…
மரங்கள் கடத்தி விற்கக் கூடிய பணம் தரும் பொருளாக பார்த்தப்படுகிறது…
மலைகள் நொறுக்கி Msand Psand போன்ற கட்டுமான பொருள்களாக மாற்றி அனுப்பும் பணமுடை பொருளாக பார்க்கப்படுகிறது…
ஒருவேளை அதை செய்ய முடியாத இடங்களில் தனியார் reaort போன்றவற்றை கட்டி பணம் கொழிக்கும் தொழிலாக பார்க்கப்படுகிறது…
தண்ணீரை பொறுத்தவரை முழுக்க முழுக்க பொருளாதாரப் பொருளாக பார்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது…
கடலைப் பொருத்தவரை சந்தேகத்திற்கு இடமின்றி பன்னாட்டு முதலாளிகளின் வேட்டை பகுதியாக மாறிவிட்டது…
இந்தப் பார்வையிலிருந்து, இந்த பார்வை பார்க்கின்ற தளத்திலிருந்து…
ஒரு மனிதன் ஆடு மாட்டை மனித வாழ்வினுடைய பெருஞ்செல்வமாக…
மரங்களை நாம் மூச்சு வாங்குகின்ற உயிர்க்காற்றை சுரக்கும் அமுதசுரபியாக…
மலைகளை மனித வாழ்க்கைக்கு மட்டுமின்றி பல்லுயிர் வாழ்க்கைகும் தேவையான உயிரின சுழற்சி நிகழ்கின்ற இடமாக…
தண்ணீரை பள்ளியிருக்குமான அடிப்படை தேவையான பொருளாக…
கடலை மனித இனத்திற்கு மட்டுமின்றி அனைத்து உயிரினத்திற்குமான ஆதி நிலமாக…
பார்ப்பதற்காக, இந்தப் உண்மையான பார்வை மக்கள் மனதில் உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார் அண்ணன் சீமான்.
திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட மரங்களின் மாநாடு குறித்து பொதுத்தளம் பெரிதாக பேசப்படவில்லை, என்றாலும் கேளிக்கையாக சில செய்திகளை வெளியிட முற்பட்டது. அதன் பிறகு சிறப்பாக நடத்தப்பட்ட மலைகளின் மாநாடு, விஜய் நிகழ்த்திய அரசியல் படுகொலையின் பின்னே மூடி மறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாம் நடத்திய “தண்ணீர் மாநாடு” வேறு வழியே இல்லை என்ற நிலையில் ஓரளவிற்கு பொதுத்தளத்தில் பேசுபொருளாக மாற்றப்பட்டது. அப்படி இருந்தும் தண்ணீர் மாநாட்டில் கூடிய கூட்டத்தைக் குறித்து பேச மறந்த Behind woods போன்ற நிறுவனங்கள், அந்த தண்ணீர் மாநாட்டுக்கு 30 லட்சம் மதிப்புடைய காரில் வந்து இறங்கினார் சீமான் என்று எழுதியது.
இறுதியாக கடலம்மா மாநாடு..
கடலம்மா மாநாடு திடல் அமைந்த இடம் 15 கிலோ மீட்டர் அருகில் எந்தவித கிராமங்களும் இல்லாத ஒரு முக்கிய சாலையின் உடைய பகுதி. அந்தப் பகுதியில் இத்தகைய கூட்டத்தை கூட்டுகின்ற துணிச்சல் நாம் தமிழர் கட்சியினரை தவிர, வேறு யாருக்கும் இருக்க முடியாது.
இருந்த போதும் அங்கே கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே இருந்த நாற்காலிகளை படம் பிடித்து காட்டி, அண்ணன் சீமான் அவர்கள் காலி நாற்காலியை பார்த்து பேசுகிறார் என்பது போலவும், மழை வந்ததால் பாதியிலேயே நிறுத்திவிட்டு கிளம்பிவிட்டார் என்பது போலவும் காட்சி பதிவுகளை உருவாக்கி இந்த காட்சி ஊடகங்கள் தன்னைத்தானே கேவலப்படுத்தி கொள்கிறது.
கடலம்மா மாநாட்டை பொருத்தவரை, 15க்கும் மேற்பட்ட youtube சேனல்கள் நேரலை செய்தனர். இரண்டு முக்கிய காட்சி ஊடகங்கள் நேரலை செய்தது. இவ்வளவு சாட்சிகள் இருந்த பொழுதும், திராவிட கூடாரத்துக்கு அடியாள் வேலை செய்கின்ற இந்த ஊடகங்கள் அண்ணன் சீமான் அவர்களுடைய வரலாற்றுப் பெருநிகழ்வை இருட்டடிப்பு செய்கிறவேலையை தொடர்ந்து செய்கின்றது.
மரங்களின் மாநாட்டில் சீமான் பேசியது என்ன ?
மலைகளின் மாநாட்டில் சீமான் பேசியது என்ன?
தண்ணீரின் மாநாட்டில் சீமான் பேசியது என்ன?
கடலம்மா மாநாட்டில் சீமான் பேசியது என்ன ?
என்பது குறித்து விவாதங்களை நடத்தி இருக்க வேண்டிய அறம் சார்ந்த ஊடகங்கள், அது குறித்து எல்லாம் எந்தவித விவாதங்களையும் தொடராமல் அங்கே நிகழ்கின்ற நிகழ்வுகள் குறித்து ஏளனமாக பதிவு செய்கிற போக்கையே பார்க்க முடிகிறது.
இந்த புவி பெருநிலத்தில், முன்னம் தோன்றிய முதல் குடி தமிழ் குடி என்ற பெருமை வரலாற்றுப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் உடைய தொடர்ச்சியே நாம்.
நமக்கு ஏற்கனவே நிரம்ப அறிவுச்சிந்தனைகள் பெற்ற ஒரு சமூகம், அறிவியல் சிந்தனைகளை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ஒரு சமூகம்.
இடையில் உருவான சில சருக்கல்களினால் நமது சிந்தனை மரபு கெட்டு போய் நிற்கிறது.
வரலாற்றின் வழிநெடுக, ஒவ்வொரு கையறு காலத்திலும் தமிழர் வரலாற்றில் ஒரு சில சிந்தனைவாதிகள் தோன்றி தமிழரின் மரபை அதன் தொன்மையோடு மீட்டுருவாக்கம் செய்து வந்துள்ளனர்.
அந்த வகையில் அண்ணன் சீமான் அவர்களுடைய தொடர்ச்சியான சூழல்கள் சார்ந்த மாநாடுகள், இந்த பேரண்டத்தின் மீது தமிழர்கள் கொண்டுள்ள அறிவு சிந்தனையை மீட்டுருவாக்கம் செய்து, இந்த தமிழ்ச் சமூகம் ஒரு நிகழ்வினை அறிவியல் பூர்வமாக அணுகுகின்ற போக்கினை இந்த மண்ணில் கட்டமைக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்ச் சமீகம் அறிவியல் அறிவோடு மீள் கட்டமைப்பாகிறது. அதை கட்டமைக்கும் மீட்பர் அண்ணன் சீமான் என்பதும் பெருமையே !
தமிழம் செந்தில்நாதன்
22-11-2025