வெற்றிகரமான ஜி20 உச்சி மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என்று இந்தியப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
24-11-2025 | புதுடில்லி –
வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் பயணத்தை முடித்து கொண்டு, டில்லி திரும்பினார்.

தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கிற்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி சென்று இருந்தார். அவர் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியா-பிரேசில்-தென் ஆப்ரிக்கா தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றினார். தென் ஆப்ரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை நேற்று சந்தித்த பிரதமர் நரே ந்திர மோடி, வர்த்தகம், முதலீடு, அரிய வகை கனிமங்கள் இறக்குமதி, செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பேச்சு நடத்தினார்.
இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பானின் சனே டகைச்சி மற்றும் கனடாவின் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். தென் ஆப்ரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டில்லி திரும்பினார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும். உலகத் தலைவர்களுடனான எனது சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. மேலும் பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும். ஜி20 உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென் ஆப்ரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் சிறில் ராமபோசா மற்றும் தென் ஆப்ரிக்கா அரசிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.