மூதூர் மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

25-11-2025 | மூதூர் –

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றை மீட்டுத் தருமாறு கோரியும் (24.11.2025) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் (குளோபல் சீ பூட்) நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

மூதூர் தக்வா நகர் கடற்கரை பள்ளிவாசலிலிருந்து தொடங்கிய இந்தப் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி ஊடாக சென்று மூதூர் பிரதேச சபையில் முடிவடைந்தது.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் ரோஸானாவிடமும் மகஜரைக் கையளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மீனவர்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“மீனவர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்!”

“கடல் வளங்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”

“மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்”

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள், தினமும் கடலுக்குச் சென்று எங்கள் குடும்பங்களை நடத்துபவர்கள். எங்கள் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடைமுறை எங்களுக்குச் சட்டவிரோதமாகவும் அநியாயமாகவும் இருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர் எனக் கூறினர்.

Leave a Reply