சிவசுப்பிரமணியம் கஜேந்திரன் அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு – அனைத்துலகத் தொடர்பகம்.

04-12-2025

தமிழீழப்பற்றோடும் தாய்மொழிப்பற்றோடும் தனது இறுதிமூச்சுவரைத் தமிழீழ விடுதலைக்காகப் பணியாற்றிய சிவசுப்பிரமணியம் கஜேந்திரன்;  அவர்கள், 24.11.2025 அன்று உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது.  

இவர், தமிழீழத் தேசியத்தலைவரையும் தமிழீழத்தையும் தாய்மொழியையும் ஆழமாக நேசித்த மனித நேயமுள்ள பண்பாளராவார். தமிழீழத் தேசியத்தலைவரது தலைமைத்துவப் பண்புகளில் மிகுந்த உறுதிப்பாடு கொண்டவராவார்.  

இவர், 1993ம் ஆண்டு புலம்பெயர்ந்து கனடா நாட்டின் ரொரன்ரோவில் பல்வேறு தாயக வேலைத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி, ஒரு தேசியச்செயற்பாட்டாளராகத் தன்னை இணைத்துக் கொண்டவராவார். உலகத் தமிழர் அமைப்பு, கனடாத் தமிழ்க் கல்லூரி ஆகியவற்றில் தன்னை இணைத்துச் செயற்பட்டதுடன், “டவுண்ரவுண்” எனும் இடத்தின் ஒரு பகுதிப்பொறுப்பாளராகச் செயற்பட்டுவந்தவருமாவார்.  

இவர், கனடாவில் தாயகம் சார்ந்த அனைத்துப் போராட்டங்களிலும் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்ததுடன், தமிழ்மக்களை ஒருங்கிணைத்துப் பல எழுச்சிப்போராட்டங்களை முன்னின்று வழிநடத்தியவராவார். தாயகம் நோக்கிய பணிகளை, கடந்த “கொரோனா” நோய்த்தொற்றுக் காலத்தில் கடுங்குளிரான காலநிலையிலும் தன்னலம் கருதாது, மனம் தளராது செய்துமுடித்தவராவார்.  

இவர் வாழ்ந்து வந்த பிரதேசத்தில் மக்களுடன் அன்பாகவும் பண்பாகவும் உறவினைப்பேணித்  தாயகத்தின் வேலைத்திட்டங்களிற்கு மக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொடுத்தவராவார். இவரின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளிற்காக, தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களிடமிருந்து பாராட்டுக்கடிதத்தினையும் பெற்றிருந்தார்.   

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீதும் ஆழமான பற்றுதல்கொண்டு,  போராட்டத்தின் ஆரம்பகாலம் தொடக்கம் தனது இறுதிமூச்சு வரை,  தன்னை அர்ப்பணித்துத் தேசவிடுதலைக்காக மிகப்பெரும் பலம் சேர்த்த இவரது  இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்,  உறவினர்,  நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன்,  சிவசுப்பிரமணியம் கஜேந்திரன்;  அவர்களின் விடுதலைப்பற்றிற்காகவும் தேசவிடுதலைக்கு அவர் ஆற்றிய பணிகளிற்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.  

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ” 

அனைத்துலகத் தொடர்பகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள். 

Leave a Reply