இலங்கையில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.8 மில்லியனைத் தாண்டியுள்ளது – பேரிடர் மேலாண்மை மையம்
05-12-2025 | இலங்கை
தித்வா புயலால் நாடளாவிய ரீதியில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு இன்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துள்ளது. கடந்த ஒருவாரமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், காணாமல் போனோரை தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வியாழக்கிழமை (04-12-2025) பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளது.

வியாழக்கிழமை (04-12-2025) மாலை வரை நாடளாவிய ரீதியில் 509 680 குடும்பங்களைச் சேர்ந்த 1 814 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 481 பேர் உயிரிழந்துள்ளதோடு, காணாமல் போயுள்ள 345 பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது மாத்திரமின்றி 1967 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 50 173 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அனர்த்த நிலைமை காரணமாக 48 559 குடும்பங்களைச் சேர்ந்த 171 492 பேர் 1236 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறலின் படி நேற்றைய தினம் நாட்டின் பல பகுதிகளிலும் மாலை வேளையில் கன மழை பெய்தது. அதேபோன்று இன்றைய தினமும் வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 6 முதல் 9 வரை மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் தென் மாகாணத்தைப் பாதிக்கும். அத்தோடு இந்த மழைக்காலநிலையானது மத்திய மாகாணத்தில் குறிப்பாக குறிப்பாக மாத்தளை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைப் பாதிக்கும். அந்த அடிப்படையிலேயே மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான ஆறுகள் பெருக்கெடுத்தமையால் வெள்ள நீரில் மூழ்கியிருந்த பல தாழ் நிலப்பகுதிகளில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது. எனினும் களனி கங்கையை அண்மித்த சில தாழ் நிலப்பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள நீர் காணப்படுகிறது. இதேவேளை கலா ஓயா மற்றும் மகாவலி கங்கiயை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.