பதுளையில் 22,793 நுகர்வோர் குடிநீரைப் பெற முடியவில்லை; 51,916 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை; 76 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

05-12-2025 | பதுளை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பதுளை மாவட்டம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 22,793 பாவனையாளர்களுக்கு இன்னும் குழாய் ஊடான குடி நீரை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது. 51,916 வீடுகளுக்கு இன்னும் மின் விநியோகமும் தடைபட்டுள்ளதாக பெருந்தோட்ட, உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் பதிவான பாதிப்புக்கள் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

15,008 குடும்பங்களைச் சேர்ந்த 51,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளதோடு, காயமடைந்த 15 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

9 பேர் மண்சரிவுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதோடு, எவ்வித தகவலும் இன்றி நால்வர் காணாமல் போயுள்ளனர்.

7630 குடும்பங்களைச் சேர்ந்த 24 396 பேர் 159 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3,647 குடும்பங்களைச் சேர்ந்த 14,483 பேர் அவர்களது உறவினர்களது வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் அனர்த்தங்களின் பாதிப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றமையாலும், பெரும்பாலான வீதிகள் ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமையாலும் முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. எனினும் 298 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 5,138 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனர்த்தங்களால் பதுளையில் சுமார் 95,915 பாவனையாளர்களுக்கு நீர் விநியோகம் தடைபட்டது. 73,121 பாவனையாளர்களுக்கு மீள நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் 22,793 பாவனையாளர்களுக்கு இன்னும் குழாய் ஊடான குடி நீரை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது. அவர்களுக்கு இயன்றவரை பவுசர்கள் மற்றும் நீர்த்தாங்கள் மூலம் நீரை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். 290,222 மொத்த மின் பாவனையாளர்களில் 197,798 பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் தடைபட்டது.

சில மின் உற்பத்தி இயந்திரங்கள் (ட்ரான்ஸ்போமர்) வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பதுளை மாவட்டத்திலுள்ள 1315 மின் உற்பத்தி இயந்திரங்களில் 844 மின் உற்பத்தி இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு பதிலாக 556 மின் உற்பத்தி இயந்திரங்கள் சேவையில் இணைக்கப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படுகிறது. மேலும் 288 மின் உற்பத்தி இயந்திரங்களை மீளமைக்க வேண்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இதுவரையில் 145 882 பாவனையாளர்களுக்கு மின் விநியோகம் மீள வழங்கப்பட்டுள்ளது. 51 916 வீடுகளுக்கு இன்னும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. பதுளையில் மாத்திரம் 14 வைத்தியசாலை கட்டமைப்புக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன. மஹியங்கனை, கந்தேகெதர வைத்தியசாலைகளும், ஸ்பிரின்வெலி, எபரோ , சில்மியாபுர வைத்திய மத்திய நிலையங்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

எவ்வாறிருப்பினும் மஹியங்கனை வைத்தியசாலையில் விசேட சத்திரசிகிச்சை பிரிவு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 175 தொலைதொடர்பு தூண்களில் 76 தூண்கள் சேதமடைந்தன. அவற்றில் 66 தூண்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. பதுளையிலுள்ள 36 பிரதான வீதிகளில் 25 வீதிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அவற்றில் சில தற்காலிகமாக திறக்கப்பட்டன. தற்போது 16 வீதிகள் முற்றாக திறக்கப்பட்டுள்ளன. எனினும் 9 வீதிகளை இன்னும் மீளத்திறக்க முடியாதுள்ளது.

பசறை – லுணுகலை, வெலிமட – நுவரெலியா வீதிகளை மறுசீரமைப்பதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏனைய 175 சிறுவீதிகளை மீள் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை 76 பாடசாலைகள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. 13 பாடசாலைகள் பாரதூரமான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன. இவை அனைத்தையும் விரைவில் மீள் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள என்றார்.

Leave a Reply