இலங்கையில் ஏற்பட்ட திடீர் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்திய பேரிடரிலிருந்து மீள்வதற்கு 50 பில்லியன் ரூபாவை மதிப்பிட்டு குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
05-12-2025 | இலங்கை –
நாட்டில் ஏற்பட்ட திடீர் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்திய பேரிடரிலிருந்து மீள்வதற்கு 50 பில்லியன் ரூபாவை மதிப்பிட்டு குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (03-12-2025) மாலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூடத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த 50 பில்லியனில் 20 பில்லியன் ரூபா அபிவிருத்தி நிவாரணங்களுக்காகவும், 30 பில்லியன் ரூபா அபிவிருத்தி உதவிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். தித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாடளாவிய ரீதியில் 16 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 470க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர். அது மாத்திரமின்றி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், 44 000க்கும் அதிகமான வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்த மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முழுமையான சேதமடைந்த வீடுகளுக்கு தலா 25 இலட்சம் ரூபா வழங்கப்படும் என்றும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு சேததத்துக்கு ஏற்ப நிதி உதவி வழங்கப்படும் என்றும் அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 5 மணியளவில் விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதன் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பாராளுமன்றத்தில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வரவு – செலவு திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு நிவாரணத்தையோ அல்லது உதவிகளையோ வழங்க முடியாது என குற்றஞ்சாட்டியுள்ள பிரதான எதிர்க்கட்சி, ஜனவரியில் புதிய வரவு – செலவு திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை புதன்கிழமை (3) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
அந்த வகையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றாமல், குறை நிரப்பு பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டும். அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள முழுமையான சேதங்கள் மற்றும் அவற்றை மறுசீரமைப்பதற்கான செலவுகளை மதிப்பிட்டதன் பின்னர் ஜனவரியில் புதிய வரவு – செலவு திட்டமொன்றை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.