இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப இணைந்து பணியாற்றுவது குறித்து இந்திய உயர் ஸ்தானிகருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் கலந்துரையாடினார்.
09-12-2025 | கொழும்பு –
பேரனர்த்த சூழ்நிலையில் இந்தியா தொடர்ச்சியாக வழங்கிவரும் உடனடி உதவிகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இலங்கையை மீட்டெடுப்பதிலும், மீளக்கட்டிnழுப்புவதிலும் இருநாடுகளும் எவ்வாறு ஒன்றிணைந்து பணியாற்றமுடியும் என்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.

‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பேரனர்த்தத்தை அடுத்து ‘அயலகத்துக்கு முதலிடம்’ எனும் கொள்கையின் பிரகாரம் இந்தியா மனிதாபிமான மற்றும் தொழில்நுட்ப ரீதியில் அடுத்தடுத்து பல்வேறு உதவிகளை வழங்கிவருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (07-12-2025) வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போது நாட்டின் சமகால நிலைவரம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதன்படி ‘தற்போதைய நெருக்கடி நிலையில் ஒப்பரேஷன் சாகர் பந்து எனும் திட்டத்தின்கீழ் எமது நெருங்கிய நண்பனும், அயல் நாடுமான இந்தியா தொடர்ச்சியாக வழங்கிவரும் உடனடி உதவிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எனது நன்றியை வெளிப்படுத்தினேன்’ என அமைச்சர் விஜித்த ஹேரத் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதிலும், மீளக்கட்டியெழுப்புவதிலும் இருநாடுகளும் எவ்வாறு ஒன்றிணைந்து பணியாற்றமுடியும் என்பது பற்றியும் இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.