இலங்கையில் ஏற்படும் பேரழிவுகளால் இதய நோய் அபாயம் 40 சதவீதம் அதிகரிக்கிறது.
09-12-2025 | இலங்கை –
அனர்த்த நிலமைகளின் பின்னர் தனிநபரிடம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 40 சதவீதமாக அதிகரிக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இருதய நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வைத்திய நிபுணர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

செய்லோன் தித்வா புயலின் தாக்கத்தால் இலங்கை வெள்ளம், மண்சரிவு என பேரிடரை சந்தித்துள்ளது. இவ்வாறன அனர்த்த நிலமைகளின் பின்னர் தனிநபரிடம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 40 சதவீதம் அதிகரிக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பேரிடரின் விளைவாக ஏற்படும் மன அழுத்தம், வீடுகளை இழத்தல் மற்றும் அன்பானவர்களை இழத்தல் போன்ற உளவியல் தாக்கங்கள் ஒரு சிலருக்கு நாளடைவில் இருதய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம்.
இந்த உளவியல் அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத் துடிப்பை வேகப்படுத்துகிறது. அத்தோடு குருதியழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட நோய் நிலமைகளால் அவதிப்படும் நாட்பட்ட நோயாளர்கள், சில நாட்களுக்கு மருந்துகளை உரியவாறு பெறவில்லை எனின் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். மோசமான தூக்கம் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருத்தல் மற்றும் பதற்றம் காரணமாக தூக்கமின்மை ஏற்படுவது, இருதயச் செயல்பாட்டைச் சீர்குலைக்கிறது.
சீரற்ற உணவு மற்றும் பழக்கம்,அவசர கால உணவுகள் மற்றும் அழுத்தத்தைச் சமாளிக்கப் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்குத் திரும்புவதும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது படபடப்பு போன்ற மாரடைப்பு எச்சரிக்கை அறிகுறிகள் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவமனையை நாடுவது அவசியம். குறிப்பாக இருதய நோயாளிகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் இந்நாட்களில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.