இலங்கைத் தீவின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதத்தைக் கொண்ட 14 மாவட்டங்கள் நிலச்சரிவு அபாயகரமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
13-12-2025 | கொழும்பு –
நாட்டில் மண்சரிவு அபாயமுள்ள 14 மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்கள் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீத்தையும், மொத்த சனத்தொகையில் 34 சதவீதத்தையும் கொண்டுள்ளன.

எனவே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் துரிதமாக அவ்விடங்களிலிருந்து வெளியேற மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12-12-2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்;
மண்சரிவு அபாயமுள்ள 14 மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்கள் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதமானவையாகும். அத்தோடு மொத்த சனத்தொகையில் 30 சதவீதத்தை இந்த மாவட்டங்கள் கொண்டுள்ளன. கடந்த நவம்பர் 20ஆம் திகதி முதல் இதுவரையில் 2710 இடங்களை ஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 589 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை தித்வா புயலின் பின்னர் நிலங்களில் வெடிப்புக்கள் ஏற்படுதல் உள்ளிட்ட 736 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மண்மேடு சரிந்து விழுதல் 482, கற்பாறை பிளவு 42 என்பன பதிவாகியுள்ளன. இவை தவிர நிலங்கள் தாழிறங்குதல், விரிசல்கள் ஏற்படல் என்பனவும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பல குழுக்கள் ஏற்கனவே மண்சரிவுகள் பதிவாகியுள்ள இடங்களில் தொடர்ச்சியான ஆய்வுகளை முன்னெடுத்துள்ளன.
100 மீற்றருக்கும் அதிக தூரத்துக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ள 1200 இடங்கள் செய்மதிப்படங்கள் ஊடாக அடையாளங் காணப்பட்டுள்ளன. வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாமல் 919 மண்சரிவுகளும், வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படுத்திய 322 மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன. 1291 வீடுகள் மண்சரிவுகளில் முற்றாக சிக்கியுள்ளன. இந்த எண்ணிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படக் கூடும். மண்சரிவுகள் ஏற்படக் கூடிய 15 000 இடங்கள் இனங்காணப்பட்டு அவை தொடர்பில் மக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர சட்ட விரோத கட்டடங்கள், எமக்கு அறிவிக்கப்படாத பல இடங்கள் கூட மண்சரிவு அபாய எச்சரிக்கை மிக்கவையாக இருக்கலாம். கடுகன்னாவை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடம் தொடர்பில் 2016ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே எச்சரிக்கை விடுக்கப்படும் பிரதேசங்களில் எக்காரணத்துக்காகவும் கட்டடங்களை நிர்மானிக்க வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
இம்முறை மண்சரிவுகளாலேயே அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. எனவே மண்சரிவு தொடர்பில் வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை அவதானித்து அதிகூடிய மழைவீழ்ச்சிகளின் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மக்களை அறிவுறுத்துகின்றோம் என்றார்.