கப்டன் திருச்செல்வம் 15.12.1987 

15.12.1987 |

அந்தோனி குரூஸ் அல்போன்ஸ்  
செல்வபுரம், முல்லைத்தீவு. 

பிறப்பு: 04.07.1964 
வீரச்சாவு :15.12.1987 

கடல் அலைகள் தாலாட்டுப் பாடும் முல்லை நகர். அன்று மக்கள் பெருந்திரளாக நிறைந்து நின்றார்கள், அந்த மண்ணில் பிறந்த மகனொருவனின் துயர் கேட்க, அவ்வூரின் மக்கள் கூடி நின்றனர். — 

அந்நிய ஆக்கிரமிப்புக் கரத்தினை வெளிச்சம் போட்டுக் காட்ட, அங்கு ஒரு தீபம் சுடர்விடத் தொடங்கி இருந்தது. போர்முனையில் வல்லவனொருவன் தன்னுடைய . சாவுப் பயணத்தைத் தொடங்கி இருந்தான் . 

அங்கு அமைதிப் போர்வையில் நுழைந்துவிட்ட காந்தி தேசத்தவர்களுக்கு எதிராக – எங்களது மறுக்கப்பட்ட உரிமைகளை வேண்டி – ஒரு அகிம்சைப் போர் தொடுக்கப்பட்டிருந்தது. ‘ நீரையும் உணவையும் மறுத்து ஓர் அக்கினிப் போராட்டம்.’ 

திலீபனைத் தொடர்ந்து முல்லைத்தீவில் திருச்செல்வம் போராட்டத்தைத் தொடங்கி இருந்தான் – மட்டக்களப்பிலும், திருமலையிலும் போராட்டம் பரவித் தொடர்ந்தது. 

அவர்கள்! எங்கள் தாயகப் பூமி பிரிக்க முடியாததென்று போர் தொடுத்தனர்.         அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை நிறுத்திவிடு சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை விடுவி! சன, வேண்டி நின்றனர். 

தனது மண்ணினதும் மக்களினதும் மீட்சிக்காகத் திருச்செல்வம், சாகும் வரையிலான – உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தான். நீரையும் உணவையும் மறுத்து ஒரு கடுமையான போராட்டம். அவனது போராட்டத்திற்கு ஆதரவாக வன்னியின் மக்கள் அனைவருமே அணிதிரண்டனர். சகல மக்களமைப்புகளும் அவனுடன் இணைந்து குரல் கொடுத்தன. 

” இது புலிகளின் கோரிக்கைகள் மட்டுமல்ல தமிழீழ மக்கள் அனைவரினதும் வேண்டுகோள்களாகும்.”  

உண்ணாவிரத மேடை;  

3 ஆவது நாள்!  

திருச்செல்வம் சோர்ந்து படுத்திருந்தான். அந்த அழகிய வதனம் வாடிவிட்டது. மக்கள் அமைதியாகத் தம் உள்ளத்திலேயே அழுத கொண்டிருந்தனர். 

தூரத்தில் – ஓர் ஓரமாக அவனது தாயார் – தன் மகனை விழிவெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தாயின் கண்ணீரைக் கண்டு கலங்கக் கூடாது என, அவன் –எண்ணினான் போலும். அந்தப் புனிதமான தாயும் எங்களிடம் ஒன்றை வேண்டி இருந்தாள். 

‘ எனது பிள்ளை போராடட்டும். அவனது போராட்டம் மிகவும் சரியானதுதான். ஆனால், இறந்தபின் எனது மகனைச் சிறிதுநேரம் என்னிடம் தந்துவிடுங்கள்.  

-என் தாபத்தை நான் தீர்க்க வேண்டும். 

அவனில் விழுந்து நான் அழ வேண்டும். 

அவன் இந்தத் தேசத்தின் புதல்வன் – என்றாலும் எனது வயிற்றிலும் பிறந்தவன்

விடுதலை உணர்வில் அந்தத் தாய் குறைந்தவள் அல்ல. அந்தத் தாயின் வேண்டு கோளும் பின்னர் ஒரு நாள் நிறைவேறத்தான் செய்தது. 

உண்ணாவிரதப் போராட்டத்தின் ஆறாவது நாள்! | 

இந்தியப் படைத் தளபதி மேஜர் டாட்டா அன்று வந்திருந்தான். அங்கு கூடிஇருந்த மக்களின் மன எழுச்சி, இந்தியத் தளபதியின் மனதைக்கூட மாற்றி இருந்தது. அவன் மக்களிடையே கூறினான்: – 

”உங்களது போராட்டத்தின் நியாயம் எனக்கு விளங்குகிறது. இந்த மக்களின் மன உணர்வுகளும் எனக்கு விளங்குகிறது. எனக்கு மேலே இருப்பவர்களுக்கு இதை நான் தெரியப்படுத்துகிறேன். ஆனால், ஏனென்று தெரியவில்லை – அவர்களுக்குப் பிரச்சினைகள் விளங்குவதே இல்லை” 

அந்த இந்தியத் தளபதியினால், ஆக்கிரமிப்பாளனின் நோக்கத்தை மறைக்க முடியாமல் போயிற்று. 

திருச்செல்வம் மேடையில் வாடிக்கிடந்தான். அவனது தேகம் உருக்குலைந்துவிட்டது. கண்கள் குழிவிழுந்து, முகம் களையிழந்து விட்டது. கூடி நின்ற மக்களின் கண்ணீருக்கிடையில் அவன் வாடிவதங்கிக் கிடந்தான். அன்றுதான் திலீபனின் உயிர்த் தியாகம் பற்றிய செய்தி கிடைத்தது . ஆழ்ந்த சோகத்தில் இருந்த மக்களின் மனங்களில், அச்செய்தி இடிபோல இறங்கியது. மக்களின் “ஓ’ வென்ற அழுகுரல் வானில் எழுந்து, எங்கும் பரந்தது. திருச்செல்வம் பேச விரும்பினான் -தனது இறுதிச் செய்தியைத்தான் நேசித்த மக்களுக்குச் சொல்ல விரும்பினான். களைத்துச் சோர்ந்துவிட்ட அவனிடத்திலிருந்து உடைந்த வார்த்தைகளாக, அவனது உள்ளத்தின் உணர்வுகள் வெளிப்பட்டன. 

 – எனது அன்பான மக்களே…….. 

தீலீபன்……. அண்ணாவின் வீரமரணம்… எனக்கு ……… ஒன்றை ….. உணர்த்தியது… எனது சாவும்……. உறுதியானது! இந்திய வல்லாதிக்கம்……. என்னையும்……. சாகடிக்கலாம்………. ஆனால்………. உங்களுக்கு ………. எனது இதயத்தின் வேண்டுகோள் ஒன்று . நீங்கள்…. தலைவர் பிரபாகரனை ……… நம்புங்கள்….. எமது …….. இயக்கத்தை …… நம்புங்கள். அவர்கள் மட்டும் தான் உங்களுக்காக.. தங்கள்……… உயிர்களையும்…… தரத் தயாராக……. இருக்கிறார்கள்.” 

அவனது ஒவ்வொரு வார்த்தையும் மக்களின் பலத்த அழுகுரல்களுக்கு மத்தியில் தான் வெளிவந்தது. அவை வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல தேசத்தை நேசித்த போராளி ஒருவனின் உள்ளத்தின் வெளிப்பாடு. ஆறு நாட்கள்! 

அது ஒரு மிகக் கொடிய நிகழ்வு! 

உயிர் கொடுக்க, உணவை மறுத்து ஒரு நெடிய பயணம். ஆனாலும், திருச்செல்வம் காப்பாற்றப்பட்டான். 

லெப். கேணல் திலீபனின் வீரமரணம் – அதனால் ஏற்பட்ட தமிழீழ மக்களின் எழுச்சி இந்தியாவைத்தம் நிலையிலிருந்து இறங்கி வரச்செய்தது. 

திருச்செல்வத்தின் உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டது. அவனது ”சாவு” அன்று தவிர்க்கப்பட்டது. மட்டக்களப்பிலும், திருமலையிலும் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டங்களும் இடை நிறுத்தப்பட்டன. 

நீர் பாயும் வயல்வெளியின் ஓரக்காடுதான்  புலிகளின் அன்றைய பயிற்சி முகாம் சிற்றாறு சுற்றியோடும் பெருஞ்சோலைக்காடு அங்கே கடுமையான பயிற்சியை இனிய முகத்தடன் சந்தித்துக் கொண்டிருந்தான் திருச்செல்வம். பயங்கரத்தைப் பாடும் ஆழக்கடலின் அலைகளுக்குள் வாழ்ந்தவன்; வலைவீசி, வலைவீசி உரத்துவிட்ட தேகம். சலிப்பு அவனுக்குத் தோன்றியதே இல்லை. கடலன்னை வளர்த்த பிள்ளை அவன். 

கப்டன் லோறன்சின் அந்தப் பயிற்சி முகாமின் சிறந்த போராளிகளில் ஒருவனான திருச்செல்வம், ஆரம்பத்தில் மேஜர் பாலாவின் எல்லைப்புறக் காவல் குழுவில் ஒரு அங்கத்தவனாகச் செயற்பட்டான். 

இவர்களது படையணி சிறியதாக இருந்தாலும், கடுமையாகப் போராடியது. அவர்கள் எதிரிகள் நிறைந்த காடுகளையும், வெளிகளையும் அடிக்கடி கடக்கவேண்டி இருந்தது. பறிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்களில் உருவாகும் சிங்களக்குடியேற்றங்களை விரட்ட வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் திருச்செல்வம் ஒருபுதிய போராளி. போர்முனைக்கு அவன் புதியவன்; ஆனாலும் அக்குழுவின் சாதனைகளில் அவனது பங்களிப்பும் நிறைந் திருந்தது. அவர்கள் எல்லைக் கிராமங்களின் காவலர்களாக, எம் தேசத்தைக் காக்கப் போரிட்டனர். 

சிறீலங்கா இராணுவத்தினரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களிலும், திருச்செல்வம் பங்குபற்றினான். அப்பொழுதுதான் அவன் பசீலனின் குழுவில் ஒருவனாக மாறினான். பசீலனில் அவன் மிகுந்த அன்பை வைத்திருந்தான். அவர்சளிடையே நிலவிய உறவு, ஒரு போர்வீரனுக்கும் தளபதிக்குமிடையே உள்ள தொடர்பல்ல; அதற்கும் மேலாக ஒரு பாசத்தின் பிணைப்பு அவர்களிடையே நிலவியது 

அவர்கள் முல்லைத்தீவின் பல பகுதிகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டனர். நகரங்களிலும் கிராமங்களிலும் எல்லைப்புறங்களிலும் அவர்களின் படைப்பிரிவு, இராணு வத்திற்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்டது. 

அந்த நாட்களில் கிராமப்புறங்கள் தான் எங்களது மறைமுக வாழ்வின் தளங்களாக இருந்தன. அந்த மக்களின் அன்பும், கனிவுந்தான் எங்களைக் காத்து நின்றன! கிராமப் புறத்து மக்களிடையே எப்பொழுதும் திருச்செல்வம் ஒன்றிவிடுவான். யாருடனும் இலகுவாகவும் அன்பாகவும் பழகிவிடும் அவனது தன்மையால், கிராமத்தவரிடையே அவன் பெருமதிப்பைப் பெற்றிருந்தான். அம்மக்களின் உணர்வுகளை இலகுவில் விளங்கிக் கொண்டு அவர்களை நேசித்ததால்தான், அவனில் அந்தக் கிராமங்களின் மக்கள் உயிரையே வைத்திருந்தனர். மக்களை நேசிப்பவனே ஒரு உண்மைப் போராளியாக இருக்கமுடியும். புலிகளின் ஒவ்வொரு போராளியும் தமது மக்களை மிகவும் நேசித்ததனால்தான், அவர்களால் இறுதிவரை உறுதியுடன் போராட மூடிந்தது. 

இந்த நிலையில் தான் – எங்களது நலன் பேணுவதென்று காரணம் சொல்லி – அமைதிப் படை என்ற வடிவத்தில் அந்நிய இராணுவம் எம் தேசத்தில் நுழைந்தது! 

இந்தியாவை, விரும்பி நாம் அழைக்கவில்லை. போலி முகத்திரையில் புகுந்து விட்ட அந்நியனை எமது மக்களுக்கு நாம் அடையாளம் காட்ட வேண்டி இருந்தது. எமது தேசம் நடாத்திய அகிம்சைப் போராட்டங்களின் இறுதியில், ஆக்கிரமிப்பாளனின் உண்மை வடிவம் தெரியத் தொடங்கியது. 

ஒரு நாள் அதிகாலை வேளையொன்றில் முல்லைத்தீவின் கிராமங்களை வளைத்துக்கொண்ட இந்தியப் படையினர், ஏனோ முரட்டுத் தனமாக நடந்து கொண்டனர். நேற்று வரை நேசங்கொண்டாடிய இந்தியப் படையினர், இன்று கோபங் கொண்டு எம் மக்களுக்கு உதைத்தனர் – அடித்தனர்கை கால்களைக் கட்டி உச்சி வெயிலில் தெருவில் போட்டனர். தங்களின் உண்மை வடிவத்தைத் தெளிவுபடுத்தி – அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்குமாறு செய்தி கூறிச் சென்றனர். 

இந்தியப் படைகளுடனான ஒரு யுத்தத்தைத் தவிர்க்க முடியாது என்பதை, திருச் செல்வம் நன்கு அறிவான். நமது மண்ணில் வாழும் மக்களினது சுதந்திரத்தையும், மகிழ்ச் சியையும் சிதைக்க வந்த இந்தியப் படையுடனான யுத்தத்திற்குப், புலிகள் தயாராகவே இருந்தனர். 

இருள் சூழ்ந்த பனிக்காலக் காலைப் பொழுதொன்றில் மரங்கள் சூழ்ந்த அடர்காட்டின் துண்டொன்றில் இந்தியப் படைக்கு, முல்லைத்தீவில் முதலடி! அன்று இந்தியப் படை தனது இரு பெருங் கவசவாகனங்களை அதிலிருந்த சிப்பாய்களுடனேயே இழந்து நின்றது. அது தொடர்ந்த யுத்தத்தின் ஒவ்வொரு நாளும் இந்தியப் படையணிக்குப் பெரும் இழப்பு. ஆனாலும் புலிகளின் தாக்குதல் அணிக்குத் தலைமை தாங்கிய மேஜர் பசீலன் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டான். 

அது ஒரு சோகமான நாள்! 

திருச்செல்வத்தின் கரங்களில் பசீலன் துவண்டுபோய்க் கிடந்தான். அவனது தலையிலிருந்து சிந்திய இரத்தம் திருச்செல்வத்தினது கைகளிலும், நெஞ்சத்திலும் பரவிக் கிடந்தது. பசீலனின் இழப்பு தாங்க முடியாததுதான். ஆனால், இதற்கு எமது பதிலைச் சொல்லத்தான் வேண்டும். திருச்செல்வத்தினால் பசீலனின் இழப்பைத் தாங்க முடியாதிருந்தது அந்தப் படையணிக்கே பசீலனின் இழப்பு தாங்க முடியாமல் இருந்தது. அதன பின்பு அவர்கள் மிகக் கடுமையாகப் போரிட்டனர். மனதின் ஓலத்திற்கு இயங்கும் துப்பாக்கிகளின் ஓசையே சமாதானம் பேசிற்று. 

15 – 12 – 1987 அன்று அவர்கள் சிலாவத்தைக் குளத்தின் பின்புறமாகக் காத்திருந்தார்கள், வெள்ளம் வடிந்த பின்பு காவலரண் ஒன்றைத் தாக்க வேண்டும் என்று காத்திருந்தார்கள். ஈரம்நிறைந்த சதுப்பு நிலத்தில், தவளைகளின் இராக்காலக் கத்தல்களுடனேயே அன்றைய இரவும் கழிந்தது. 

 விடிந்ததும் அவர்களுக்கு ஏமாற்றந்தான் காத்திருந்தது. அந்தக் காவல் நிலையம் ஆட்களற்று வெறுமையாக இருந்தது. ஆனாலும் ஓடி வந்த ஒருசிலர் ஒரு தகவலை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றனர். 

” அலம்பிலை நோக்கி ஆயிரக்கணக்கான படையினர் செல்கின்றனர்.” 

இந்தியப் படையணியின் அந்தப் பட்டாளம், 4ஆம் கட்டையிலுள்ள வேதக் கோயி லடியில் நிலைகொண்டது. அவர்களது அன்றைய தங்கு நிலையம் அந்தத் தென்னந் தோட்டந்தான் போலும். புலிகள் இரு பிரிவாக அவர்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர்.

திருச்செல்வம் தனது அணியின்ருடன் கடற்கரைப் பக்கமாக, அவ்விடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான். ஏனோ தெரியவில்லை, அன்று அலைகளின்ஓசை அவனது மனதின் ஆசைகளைக் கிளறிக் கொண்டிருந்தது. அலைகளுக்குள் வாழ்ந்த அந்தப் பழைய வாழ்க்கையை ஒரு கணம் நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் கரையில் ஏறியவுடன் ஓடிவரும் அவனது தாயையும், தங்கையையும் நினைத்துக் கொண்டான். அந்நேரங்களில் அவர்களின் முகங்களில் தெரியும் சந்தோசமும் மகிழ்ச்சி யும் 

இராணுவத்தினரது நடமாட்டங்கள் கண்ணுக்கு நன்றாகவே தெரிந்தன, மந்துகள் நிறைந்த மரங்களுக்கு இடையால் அவர்கள் மறைந்து மறைந்து முன்னேறிக் கொண்டிருந்தனர். இராணுவத்தினரை மிகவும் நெருங்கியவுடன் அவர்கள் நிலையெடுத்துக் கொண்டனர்  இராணுவத்தினர் தொட்டுவிடும் தூரத்தில் தான், 

அது ஒரு மூர்க்கமான தாக்குதல். எம்மவரில் சிலர் ஆயிரக்கணக்கான எதிரிகளுடன் வீரமுடன் போரிட்டனர். அங்கே இராணுவத்தினரில் பலர் கொல்லப்பட்டனர். 

ஒரு புற்றின் மறைவிலிருந்து. திருச்செல்வம் தனது துப்பாக்கியை இயக்கிக் கொண்டிருந்தான் எதிரி பலமாகவே இருந்தான். ஆக்கிரமிப்பாளனின் துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று திருச்செல்வத்தின் நெஞ்சைத் துளைத்துச் சென்றது. இந்த மண்ணையும் மக்களையும் நேசித்த ஒப்பற்ற ஜீவனொன்று, தன் தாய் நிலத்தில் முகம் புதைத்தது. 

அலம்பில் கடற்கரை ஓரமாக அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள் அங்கே திருச்செல்வத்தைக் காணவில்லை . அவனைத் தாலாட்டி வளர்த்த அந்தக் கடலின் அலைகள் அவனைத் தேடினகாணாமல் கரையில் முட்டிமோதின   சோகத்தின் குமுறல் அந்த அலைகளிலும் தெரிந்தது. கடற் தாய்மகனுக்கு வாழ்த்துப் பாடினாள். 

-விடுதலைப்புலிகள் இதழ் 

Leave a Reply