வழக்கறிஞர்களை மிரட்டும் நீதிபதி! – திருப்பரங்குன்றம் சிக்கலில் காவிமயமான மதுரை உயர்நீதிமன்ற கிளை !

15-12-2025 | மதுரை

திருப்பரங்குன்றம் சிக்கலில் கவனிக்கப்படாத தமிழ் சித்தாந்த சைவ வழிபாட்டு முறைகளை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும், அதன்படி முடிவுகள் எடுக்கவேண்டும் என்றும் நேற்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மேல்முறையீடு மனுவினை தாக்கல் செய்திருந்தோம் ( SR No : 108685 /2025). முறைப்படி இன்று அந்த மனுவானது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் சிக்கல் தீபத்தூண் வழக்குடன் நாம் தாக்கல் செய்திருந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்.

இன்று காலையில் நமது வழக்கறிஞர் திரு அருணாசலம் அவர்கள் மதுரை உயர்நீதி மன்ற கிளையின் நீதிபதியும், ஜி.ஆர். ஸ்வாமிநாதன் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்தது தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை விசாரிக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நமது மனுவினையும் விசாரணையில் இணைத்துக்கொள்ளம் படி பேசினார்.

அதற்க்கு நீதிபதி செயச்சந்திரன் அவர்கள், கூடுதலாக எந்த மனுவினையும் இந்த விவகாரத்தில் எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூற, அதற்கு வழக்கறிஞர் அருணாசலம் அவர்கள், விசாரணையில் இருக்கும் அதிமுக்கியமான வழக்கில், கடைசி நேரத்தில் கூட தங்களது கருத்தை கூறலாம் என்று ஏற்கனவே நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள், மேலும் இந்த வழக்கில் தமிழ் சித்தாந்த சைவ வழிபாட்டு முறைப்படி எந்த கருத்தும் விவாதிக்கப்படவில்லை இதனால் எங்களது மனுவினையும் இணைத்து விசாரியுங்கள் என்று சொன்னவுடன் கோபமான நீதிபதி ” நீதிமன்ற காவலர்களை வைத்து இவரை வெளியேற்றுங்கள்” என்று மிகவும் கடுமையாக நடந்துள்ளார் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதிபதி.

நீதி துறையில் நீதியரசர்கள் என்ற நீதிபதியை “மை லார்ட்” என்று சொல்வது அந்த பணிக்கான மரியாதையே தவிர, நீதியரசர்கள் தன்னையே கடவுளாக நினைத்துக் கொண்டு, தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க கூடாது என்பது, நீதித்துறையில் நீதிபதிகள் மேற்கொள்ளும் பயங்கரவாதம் ஆகும். ஏற்கனவே முடிந்த வழக்கில் கூட ஒருவர் கருத்தை பதிவு செய்ய மேல்முறையீடு செய்யலாம் என்று சட்டம் சொல்லும் போது, நடந்துகொண்டு இருக்கும் வழக்கில், தீர்வின் முக்கிய அம்சங்களை கொண்ட ஒரு கருத்தை நீதிபதிகள் பார்வைக்கே கொண்டுவர கூடாது என்பது என்ன வகையான அணுகுமுறை ?

ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தீர்ப்பை விசாரிப்பவர்களுக்கே, புதிய கருத்துக்களை எதிர்கொள்ள பயம்வரும். நீதியரசர் ஜெயச்சந்திரன் எதைக்கண்டு பயப்படுகிறார் ? எதனால் இவ்வளவு வெளிப்படையான கோபத்தோடு நடந்துகொள்ளகிறார் ?

பிறகும் விடாத நமது வழக்கறிஞர் திரு அருணாச்சலம் அவர்கள், நீதிபதியை பார்த்து, நான் என்ன செய்தேன் ? நீதிமன்ற போலீசை வைத்து வெளியேற்றும் அளவிற்கு நடந்த குற்றம் என்ன ? “தமிழ் கடவுள் முருகனின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தமிழர் வழிபாட்டு முறையின் கீழ் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறும் மனுவை விசாரிக்க சொல்வது தவறா என்று கேட்டவுடன், உங்களுடைய, பார் கவுன்சில் எண் என்ன ? என்று கேட்டு மிரட்டி, துறை ரீதியாக உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டி, நீதிமன்றத்தில் நீதிமன்ற காவலர்களை வைத்து வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்.

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதே நீதியரசர்கள் இப்படிநடந்து கொள்வது மிகவும் துரதிஸ்டவசமானது. இந்த வழக்கை இதுவரை இவர்கள் எப்படி கையாண்டு கொண்டிருக்கிறார்கள், இனி எவ்வாறு கையாள போகிறார்கள் ? என்ற கேள்விகளுக்கு, நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் அணுகுமுறை சான்றாக அமைகிறது.

வீரத்தமிழர் முன்னணி முன்வைத்த, இந்த வழக்கத்தின் திசைவழி பயணத்தை மாற்றக்கூடிய முக்கியமான கருத்துக்களை கொண்ட ( 15 புள்ளிகள் கோடிடப்பட்டு இருந்தது) நமது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீதியரசர் அச்சம் கொள்ள தேவை என்ன ?, நீங்கள் அந்த வழக்கை விசாரித்து தள்ளுபடி கூட செய்யலாம். ஆனால் விசாரணைக்கே எடுத்துக் கொள்ள மாட்டேன் என்பதும், அதை முன்மொழிய வரும் வழக்கறிஞரை மிரட்டுவதும் என்ன மாதிரியான அணுகுமுறை ?

ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது, இந்த வழக்கு தொடர்பான கூடுதல் மேல்முறையீடுகளை எப்படி நீதியரசர் மறுக்கமுடியும் ?

ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று முன்மொழிய வந்த வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்களை மிரட்டி, நீதிமன்ற காவலர்களை வைத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதும், நடவடிக்கை எடுப்பேன் என்பதும் மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியது. இதுபோன்ற நீதியரசர்கள் முன்வந்து இந்த வழக்கில் இருந்து வெளியேறிக்கொள்வது நீதித்துறைக்கு செய்யும் நற்காரியம். கூடுதலாக ஒரு கருத்தினை உள்வாங்க மறுக்கும் நிலையில் இந்த விசாரணையும், அதன் தீர்ப்பும் எப்படி நேர் வழியில் செல்லும் ?

நாம் தொடுத்திருக்கும் வழக்கும் “லீவ் க்ராண்ட்” அணுகுமுறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு எடுக்காமல் விடமுடியாது என்பதன் அடிப்படையில் நமது வழக்கிற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்ற ஆவலோடு காத்திருக்கிறேன்.

அதே வேளையில், நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் இந்த அணுகுமுறைக்கு வீரத்தமிழர் முன்னணியின் கண்டங்களை பதிவுசெய்கிறேன். நீதியை நீதியாக எதிர்கொண்ட வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்களுக்கு உடன் நிற்கவேண்டியது நமது கடமை.

நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கலாம், நீதியரசர்களை விமர்சிக்க கூடாது என்பது சாலை மோசமாக போடப்பட்டிருந்தால், பொறியாளரை விமர்சிக்க கூடாது. அந்த சாலையையும், அங்கே நடப்பட்டுள்ள அளவை கல்லையும் விமர்சிக்கலாம் என்பது போல இருக்கிறது. எப்பேர்ப்பட்ட நாட்டில் வாழ்கிறோம் என நினைக்கும் போது பயமாகவும் இருக்கிறது.

தமிழம் செந்தில்நாதன்
வீரத்தமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்

Leave a Reply