“டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக உள்ளது” – அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

17-12-2025 | புதுடில்லி

காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையை எட்டியதற்கு, டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா பொது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு கடந்த சில மாதங்களாக காற்றின் தரம் மிக மோசமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிலேயே உள்ளது.

இதன் காரணமாக, பள்ளிகள், ‘ஆன்லைன்’ வாயிலாக இயங்கி வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் கூட, மதியத்திற்கு மேல் வழக்கு விசாரணைகள் நடத்தப்படுவது இல்லை. வழக்கறிஞர்கள், ‘ஆன்லைன்’ வாயிலாகவே ஆஜராகின்றனர்.

இந்நிலையில், டில்லி காற்று மாசு குறித்தும், அதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா நேற்று விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையில் நீடிப்பதற்கு, டில்லி மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாலும் 9- – 10 மாதங்களுக்குள் சுற்றுச்சூழல் மாசு அளவை முழுமையாக குறைக்க முடியாது. தற்போதைய நிலைக்கு காரணம், முந்தைய ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம்.

ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி அரசை விட, நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு நாளும் காற்றுத் தரக் குறியீட்டின் அளவை நாங்கள் குறைத்து வருகிறோம். சுற்றுச்சூழல் மாசு என்ற நோய், முந்தைய ஆம் ஆத்மி அரசால் ஏற்படுத்தப்பட்டது; இதை சரிசெய்ய நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

எரிபொருள் வழங்க கட்டுப்பாடுடில்லியில், குறைந்த காற்று மாசை ஏற்படுத்தும் பி.எஸ்.,6 தரத்தில் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும், எரிபொருள் நிலையங்கள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் டில்லி அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, நேரடியாக எரிபொருள் நிலையங்களுக்கும் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்துவர் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கட்டுமானப் பொருட்களை எடுத்துச்செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply