இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து புதிய நடைமுறைகள் தொடங்குகின்றன.
21-12-2025 | கொழும்பு
கடந்த கால யுத்தத்தின் போது வன்னிப் பிராந்தியத்தில் (கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்) இடம்பெயர்ந்து, பின்னர் 2010-ம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சொத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

இவர்களுக்கான நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் இழப்பீட்டு அலுவலகம் (Office for Reparations) உருவாக்கப்பட்டது.
இருப்பினும், போதிய விழிப்புணர்வு இன்மை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இதுவரை விண்ணப்பித்து நிவாரணங்களைப் பெற்றுள்ளனர்.
எஞ்சிய மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் நோக்கில், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தற்போது முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கவுன்சிலின் மாவட்ட பணிப்பாளர், செபஸ்டியன் ஜோன் பாப்டிஸ்ட் இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்..
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்…
நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
கடந்த 2025 டிசம்பர் 15 அன்று நடைபெற்ற விசாரணையின் போது, சட்டமா அதிபர் திணைக்களம் சில நிபந்தனைகளுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்படி, 2018-ம் ஆண்டின் 34-ம் இலக்க இழப்பீட்டுச் சட்டம் மற்றும் 2021-ம் ஆண்டின் அரசாங்க வழிகாட்டல்களுக்கு அமைவாக கீழ்க்காணும் மூன்று பிரிவினரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
- பிரதேச செயலாளர்களிடம் விண்ணப்பித்து, காலதாமதம் காரணமாக இழப்பீட்டு அலுவலகத்திற்கு அனுப்பப்படாத விண்ணப்பங்கள்.
- விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் இதுவரை பரிசீலிக்கப்படாதவை.
- இதுவரை எந்தவொரு அதிகாரியிடமும் விண்ணப்பிக்காத புதிய விண்ணப்பத்தாரிகள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான அழைப்பு
சொத்தழிவு மட்டுமன்றி, யுத்தத்தினால் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் இந்த நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என செபஸ்டியன் ஜோன் பாப்டிஸ்ட் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சட்ட நடைமுறைகளுக்கு உதவிய சட்டத்தரணிகள் நிகேஸலா மற்றும் ருவேந்திர வீரசிங்க ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்த அவர், பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் உடனடியாகச் செயற்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, விண்ணப்பங்களை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.