பண்டிகைக் காலத்தில் விபத்துகளைத் தவிர்க்கவும் – இலங்கை மருத்துவ நிபுணர்

26-12-2025 | இலங்கை –

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகக் குடும்பத்துடன் வெளிமாவட்டங்களுக்குச் செல்வோர், வீதி விபத்துகள், நீர் நிலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்படக்கூடிய விபத்துகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்திய நிபுணர் சமித்த சிரிதுங்க வலியுறுத்தியுள்ளார்.

வீதி விபத்துகள் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:

“பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான வீதி விபத்துகள் பதிவாகுவதைக் காணக்கூடியதாக உள்ளது. உற்சவக் காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகக் குடும்பத்துடன் வெளிமாவட்டங்களுக்குப் பயணிக்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் அதிகமாக நீர் நிலைகளுக்குச் செல்வதைக் காண முடிகிறது.

முக்கியமாக இந்த நாட்களில் நிலவும் அனர்த்த நிலைமையுடன் நீர் நிலைகளின் தன்மை மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக அவற்றின் உறுதித்தன்மை மாறியுள்ளது. ஆகையால் நீர் நிலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குச் செல்லும்போது அவதானமாக இருங்கள். பழக்கமில்லாத, அறியாத நீர் நிலைகளில் நீராடுவதற்கு முன்னரும், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னரும் அவ்விடத்தைப் பற்றி அறிந்த ஒருவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

நீர் நிலைகளின் ஆழம் சில நேரங்களில் அதிகரித்திருக்கலாம். முன்பு மக்கள் பயன்படுத்திய இடமாக இருப்பினும், அனர்த்தத்தின் காரணமாக அதன் தன்மை மாறியிருக்கக்கூடும். இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். வாகனச் செலுத்துநர்களின் கவனக்குறைவு மற்றும் தவறுகள் காரணமாகப் பாரதூரமான விபத்துகள் ஏற்படலாம். நத்தார் மற்றும் புத்தாண்டுப் பிறப்பை மகிழ்வுடன் கொண்டாட மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிக அவசியம்” என்றார்.

Leave a Reply