நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
07/02/2025
விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த “வீரத்தந்தையும், போராளியுமான வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்களுக்கான“ தமிழீழ அரசியல்துறையின் மதிப்பளிப்பு அறிக்கை.
மனித வாழ்வின் அதியுன்னதமான பண்பாகக் கருதப்படுவது, பெற்ற தாயையும், நாம் பிறந்து வளர்ந்த, எம்மைத் தாங்கி நின்ற மண்ணையும் பேணிப் பாதுகாத்துப் போற்றுவதாகும். இலட்சிய வேட்கையோடு தமிழீழ விடுதலைப் போரில் காத்திரமாகச் செயற்பட்ட, வீரத்தந்தைகளில் ஒருவரும், போராளி “மறைமலை” என்றழைக்கப்பட்ட சிவநாதன் ஐயாவை; நாம் இன்று (04/02/2025) இழந்து விட்டோம். இவரது சாவு தமிழீழ தேசத்திற்கு என்றுமே ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் இலட்சியப் பாதையையும், முழுமையாக ஏற்று, எமது விடுதலைப் போராட்டத்திற்கு தம்மாலான பெரும் பங்களிப்பை இவர் ஆற்றி வந்தார். பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் தமிழ் மக்களது வாழ்வு சிக்குண்டு, சிதைந்து போவதை இவர் அறவே வெறுத்தார். இந்த அடக்கு முறையிலிருந்து தமிழீழ மக்கள் முற்றாக விடுதலை பெற்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகப் போராடிய மாபெரும் விடுதலை இயக்கமாகிய, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1990களின் ஆரம்ப காலப்பகுதியிலிருந்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் செயற்பட்டு, பிற்காலத்தில் தன்னை முழுமையான போராளியாக இணைத்து, 2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் மெளனிக்கும் வரை செயற்பட்டதுடன், புலம் பெயர் தேசமான யேர்மனியில் தனது தேசக் கனவுடன் பயணித்தார்.
இவர் இரு மாவீரர்களைத் தமிழீழப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்பத்தவராவார். இவருடைய மூன்றாவது மகள் அருளாவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியமானதோர் கணனிப் பகுதியில் பணியாளராக கடமையாற்றிய வேளை, சுகவீனகாரணமாகச் சாவைத் தழுவிக்கொண்டார். இவ்வாறாக அவருடைய குடும்பமும் விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றித்து வாழ்ந்திருந்ததென்றால், இவர் வீரத்தந்தையாகவும், போராளியாகவும் விடுதலைப் பயணத்தில் பயணித்த, விடுதலை வேட்கையின் வீரியத்தை எண்ணிப் பாருங்கள். இத்தனை இழப்புக்களுக்குப் பின்பும், தன்னால் செயற்படக்கூடிய காலம் வரை அர்ப்பணிப்போடு இயங்கிய ஒரு முன்னுதாரணத் தந்தையை நாம் இழந்திருப்பது, எமது தேசத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்கான, எமது பொறுப்புணர்வை மேலும் வலுவாக்கி உள்ளதென்பதை, எல்லோரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
புலம்பெயர்ந்து யேர்மன் நாட்டில் வாழ்ந்த போதும், தான் ஒரு தமிழீழத்தாய் பெற்றெடுத்த மண்ணின் மைந்தன் என்ற தாயகப் பற்றுணர்வுடன், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகவும், தள்ளாத வயதிலும், இவர் ஆற்றிய அரும்பணிகள் மிகவும் போற்றுதற்குரியவை. தன்னாட்சி உரிமைகோரும், எமது மக்களின் விடுதலைப் போராட்டம் நியாயமானது என்பதை நன்குணர்ந்து, தனது வயோதிபத்தைக் கூடப் பொருட்படுத்தாது, எமது மக்களின் உரிமைப் போருக்கு, பெரும்பங்காற்றிய அவரின் சுதந்திர வேட்கையை, அளவிட்டு அறிந்து கொள்ள முடியாது. இவரது இழப்பால் துயருற்றிருக்கும், இவரது குடும்ப உறவுகள், எம்மின மக்கள் அனைவரின் துயரிலும், தமிழீழ அரசியல்துறையினராகிய நாமும் உளமாரப் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
சிவநாதன் ஐயா வித்தியாசமானதோர் தந்தையாவார். உன்னதமான தேசப்பற்றாளரும், போராளியும் ஆவார். பொது வாழ்வில் தன்னால் முடிந்த பெரும்பணிகளை ஆற்றியவர். இவர்களைப் போன்று, எம்மினத்தின் வீரவரலாற்று வாழ்வில், சிறந்த மனிதர்களாக வாழ்ந்தவர்களுக்கு, மதிப்பளித்து கௌரவம் செலுத்துவது, தேசியத் தலைவர் அவர்களின் வரலாற்றுப் பண்பாடாகும். இந்தச் சீரிய மரபை பின்பற்றி, அவரது உறுதியான இனப்பற்றுக்கும், விடுதலை வேட்கைக்கும் மதிப்பளித்து, இவர் ஆற்றிய விடுதலைக்கான நற்பணிகளைக் கௌரவிக்கும் முகமாக, மறைமலை (வேலுப்பிள்ளை – சிவநாதன்) அவர்களுக்கு “தமிழீழ விடுதலைப் போராளி” என்ற உயரிய கௌரவத்தினை வழங்குவதில், தமிழீழ அரசியல்துறையினராகிய நாம் நிறைவடைகின்றோம். சத்திய இலட்சியத்திற்காக களமாடி வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில், இவரும் இணைந்து; தமிழீழ விடுதலைப் பயணத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சாவு என்றும் இவர்களின் இலட்சியக் கனவை அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் இவர்கள் என்றும் கலந்திருப்பார்கள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
திரு. கி. நல்லையா
நிர்வாகப் பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
திருமதி. சி. அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்


