போரை அப்போதே உக்ரைன் நிறுத்தியிருக்க வேண்டியது தானே! நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முடிவு செய்ததை ரஷ்யா எதிர்த்தது. ரஷ்யா பேச்சை உக்ரைன் கேட்கவில்லை. இதனால் இரு நாடுகள் இடையே, 2022 பிப்ரவரியில் போர் மூண்டது.
3 ஆண்டுகளாக போர் தொடர்கிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப், விரும்புகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் இது குறித்து அவர் பேசினார். ரஷ்யா மற்றும் அமெரிக்க வெளியுறவுத் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு நடத்தினர்.
உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்குவது, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகளை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதை ஒருபோதும் ஏற்க முடியாது என ரஷ்யா தன் நிலைப்பாட்டை உறுதியாக சொல்லிவிட்டது.
அமெரிக்காவும் ரஷ்யாவும் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லாததால், அந்நாடு பங்கேற்கவில்லை. இது குறித்து கவலை தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போர் நிறுத்தம் தொடர்பாக எங்களை ஆலோசிக்காமல் எடுக்கப்படும் முடிவை ஏற்க மாட்டோம் என உறுதியாக சொல்லிவிட்டார்.
இது தொடர்பாக பதிலளித்த அதிபர் டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என உக்ரைன் அதிபர் சொன்னதை கேள்விப்பட்டேன். அப்படியானால், 3 ஆண்டுக்கு முன்பே ஒப்பந்தம் மூலம் அவர் போரை நிறுத்தி இருக்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார். இந்த மாதம் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் கூறினார்.