தென் மாவட்டங்களிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல லட்சம் மக்கள் பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள், பண்டிகை நாட்களிலும், தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து பல லட்சம் நபர்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வர்.
அப்படி பயணம் மேற்கொள்வதற்கு 2023ம் ஆண்டு டிசம்பருக்கு முன் சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், இதனால் சென்னை நகருக்கு கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, வடக்கு மற்றும் தெற்கு நோக்கி பயணிக்கும் பேருந்துகளின் புறப்பிடங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதன்படி தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் 2023 டிசம்பர் முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.