07.03.2025 – வாஷிங்டன்
அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அரசின் செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வெளிநாடுகளுக்கு நிதியுதவி நிறுத்தம், அரசின் பல துறைகளில் பணியாற்றியவர்களை பணி நீக்கம் உள்ளிட்டவற்றில் எலான் மஸ்க்கிற்கு பங்கு உண்டு. இதற்கு அமெரிக்காவில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. அரசின் ரகசிய தகவல்கள் எப்படி தனியார் நிறுவனத்தின் தொழிலதிபரான எலான் மஸ்க்கிற்கு கொடுக்கலாம் என வழக்கும் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அமைச்சரவை கூட்டம் டிரம்ப் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் எலான் மஸ்க்கும் கலந்து கொண்டார்.இந்த கூட்டத்தில் டிரம்ப் கூறியதாக வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: பணியில் இருந்து ஊழியர்களை நீக்கவும், சேர்க்கவும் எலான் மஸ்க் பரிந்துரை செய்யலாம். ஆனால், அவர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
இதன் பிறகு ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: உங்களுக்கு தேவையான, விரும்பும் ஊழியர்களை துறைகள் வைத்துக் கொள்ளலாம். இதனை நாங்களும், எலான் மஸ்க்கும் கண்காணிப்போம். அவர்கள் சிறந்த முறையில் ஊழியர்களை குறைக்கலாம். அப்படி அவர்கள் செய்யாவிட்டால், அதனை டிரம்ப் செய்வார். இவ்வாறு டிரம்ப் கூறினார்.