09.03.2025 – சென்னை
திருத்தணி காய்கறி சந்தைக்கு காமராஜர் பெயரை நீக்கி விட்டு கருணாநிதி பெயரைச் சூட்டும் முயற்சி கண்டிக்கதக்கது என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
திருத்தணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை நீக்கி விட்டு, கருணாநிதி நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட தி.மு.க., அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழகத்துக்கு தேசிய அளவில் அடையாளமும், பெருமையும் தேடித்தந்த காமராஜரின் பெயரை இருட்டடிப்பு செய்ய தி.மு.க., அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.
திருத்தணி ம.பொ.சி.சாலையில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு அங்குள்ள வணிகர்களின் கோரிக்கைப்படி ரூ.3.02 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. காலம் காலமாக காமராஜர் சந்தை என்று அறியப்பட்ட அந்த சந்தைக்கு இப்போது , ‘கருணாநிதி நுாற்றாண்டு காய்கறி அங்காடி’ என பெயர் மாற்றம் செய்ய திருத்தணி நகராட்சி தீர்மானித்திருக்கிறது.
திருத்தணி நகராட்சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காய்கறி சந்தைக்கு காமராஜரின் பெயரே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அங்குள்ள பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர். ஆனால், அதையும் மீறி கருணாநிதி நுாற்றாண்டு காய்கறி அங்காடி’ என்ற பெயரில் சந்தையை திறப்பதற்கான முயற்சிகளில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயமல்ல.