09.03.2025 – துபாய்
இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் குவித்துள்ளது.
துபாயில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும், இந்திய பவுலர்கள் நியூசி., வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். வருண் சக்ரவர்த்தி யங்கை (15 ரன்கள்) ஆட்டமிழக்கச் செய்து, இந்திய அணிக்காக முதல் விக்கெட்டை கைப்பற்றினார். அதன்பிறகு, குல்தீப் யாதவ், ரச்சின் (37 ரன்கள்), வில்லியம்சன் (11 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றினார்.
பின்னர், லேதம், மிட்செல் ஆகியோர் சிறிது நேரம் தாக்குபிடித்தனர். பிறகு, ஜடேஜா தனது நேர்த்தியான சுழல் பந்து வீச்சால், லேதமை எல்.பி.டபுள்யூ., முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து, மிட்செல், பிலிப்ஸ் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.இருவரும் சேர்ந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பிலிப்ஸின் (34 ரன்கள் )விக்கெட்டை கைப்பற்றினார் வருண் சக்ரவர்த்தி; இந்தப் போட்டியில் அவரது 2வது விக்கெட் இதுவாகும்; ஏற்கனவே யங் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஒருபக்கம் விக்கெட்டுக்கள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிய மிட்செல் 91 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து வீரர் அடிக்கும் மிக மெதுவான அரைசதமாகும். 63 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி பந்தில் அவுட்டானார். இறுதியில் பிரேஸ்வெல் (53 நாட் அவுட்) மட்டும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.
இதன்மூலம், 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
252 ரன்கள் என்ற இலக்கை அடித்து 2வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
டாஸில் தொடரும் சோகம்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியிலும் கேப்டன் ரோகித் ஷர்மா டாஸில் தோல்வியடைந்தார். இத்தொடரின் 5 போட்டியிலும் இந்தியா ‘டாஸ்’ தோற்றது. அதேநேரம் அனைத்து போட்டிகளையும் வென்றது; அந்த ராசி இன்றும் தொடருமா என பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலிருந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக 15 முறை ‘டாஸ்’களை இழந்தது குறிப்பிடத்தக்கது
பரிசு ரூ. 19.49 கோடி
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 60.06 கோடி. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 19.49 கோடி கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணி ரூ. 9.74 கோடி பெறும்.