19.03.2025 – கேப் கேனவரல்
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘போயிங்’ நிறுவனத்தின், முதல் விண்கலமான ‘ஸ்டார்லைனர்’ வாயிலாக இவர்கள் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட திட்டமிட்டனர்.
இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் வாயிலாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. போயிங் நிறுவனத்துக்காக விருந்தாளியாக சென்ற அவர்கள், விண்வெளியில் சிக்கியதால் எப்போது பூமிக்கு திரும்புவர் என்ற கேள்வி எழுந்தது. அவர்களுடைய உடல்நிலை தொடர்பான கேள்விகளும் எழுந்தன. ஆனால், இருவரும், விண்வெளி மையத்தில் தங்கியிருந்தபோது, தங்களுடைய பணிகளை மேற்கொண்டனர்.
பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவர்களை பூமிக்கு அழைத்து வர முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், ‘ஸ்பேஸ்எக்ஸ்’ விண்வெளி நிறுவனத்தின் வாயிலாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, அந்த நிறுவனத்தின் ‘பால்கன் — 9’ ராக்கெட் உடன், ‘டிராகன்’ எனப்படும் வீரர்கள் பயணிக்கும் விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை சமீபத்தில் சென்றடைந்தது.
இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், நேற்று புறப்பட்டனர். அவர்களுடன், கடந்த சில மாதங்களாக அங்கு பணியாற்றிய, அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டனர். டிராகன் விண்கலத்தில் சென்ற, நான்கு விண்வெளி வீரர்கள், அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
இந்த விண்கலம், 17 மணி நேர பயணத்துக்குப் பின், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா அருகே, கடலில் தரையிறங்கியது. கடலில் விழுந்ததும், பந்துபோல் மிதந்து வந்த விண்கலத்தில் இருந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது, நாசா விஞ்ஞானிகளையும், மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியர்கள் கொண்டாட்டம்:
சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியதையடுத்து, குஜராத்தில் உள்ள அவரது சொந்த ஊர் மக்கள், பட்டாசு வெடித்தும், டிவியில் அவரது படத்துக்கு ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக கொண்டாடினர்.