19.03.2025 – விழுப்புரம்
விழுப்புரம், காகுப்பத்தைச் சேர்ந்தவர் காத்தமுத்து, 58; கட்டட தொழிலாளி. கடந்த 2016ம் ஆண்டு, இவரது தந்தை அபிமன்னன் உடல் நலக்குறைவால் இறந்தார். அபிமன்னனின் இறப்பு சான்றிதழ் கேட்டு காத்தமுத்து, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அவர், இறந்து 8 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், அவர் இறந்ததை உறுதி செய்து, ஏற்கனவே இறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதனால், நகராட்சி பதிவு அலுவலர் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதன் பிறகு, வருவாய்த் துறையினர் விசாரணை நடத்திய பிறகு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்காக, காத்தமுத்து சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள இறப்பு பதிவு அலுவலர் (துப்புரவு ஆய்வாளர்) மதன்குமார், 41; என்பவரை அணுகினார்.
அவர், சான்றளிப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், போன் செய்தால் நேரில் வந்து லஞ்சப் பணத்தை வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, காத்தமுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைபடி, மதன்குமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வரும்படி அழைத்தார். நேற்று மதியம், காத்தமுத்து வீட்டிற்கு சென்ற மதன்குமாரிடம், ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை காத்தமுத்து கொடுத்தார்.
அதனை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அழகேசன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி உள்ளிட்ட போலீசார், மதன்குமாரை கையும், களவுமாக பிடித்தனர். இதனையடுத்து, அவரை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த ஆவணங்கள் சிலவற்றை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து, மதன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், அருங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி.40. இலவச வீட்டு மனை பட்டாவுக்கு, இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11ம் தேதி, செங்கல்பட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வரால் 100 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு, மற்றவர்கள் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
இதனால், இந்த பட்டா கேட்டு தேன்மொழி, அருங்குன்றத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சக்குபாய்,53, என்பவரை அணுகினார். இதற்கு அவர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத தேன்மொழி, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை, தேன்மொழி நேற்று மாலை 5:00 மணியளவில், வி.ஏ.ஓ., சக்குபாயிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர், உதவியாளர் சரவணன்,38, என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். பின், பணத்தை சரவணனிடம் கொடுத்தார்.
அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர், வி.ஏ.ஓ., சக்குபாய், உதவியாளர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அலுவலகத்தில் சோதனை செய்து, கணக்கில் வராத, 74,000 ரூபாயை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.