19.03.2025 – புதுச்சேரி
புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரில் நேற்றைய கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அனிபால் கென்னடி பேசுகையில், ‘புதுச்சேரி நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் தரம் இல்லை.
‘டி.டி.எஸ்., அளவு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த குடிநீரை குடித்தால், மக்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும்’ என பேசினர்.
அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பதிலளித்து பேசுகையில், ”குடிநீரால் பாதிக்கப்பட்டுள்ள நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, தினசரி 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம், வரும் தமிழ் புத்தாண்டில் துவங்கப்படும்,” என்றார்.
அதேபோல, சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது போல, மஞ்சள் அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் வழங்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ”எல்லா தரப்பு கோரிக்கைகளையும் ஏற்று செயல்படும் புதுச்சேரி அரசு, இந்த விஷயத்திலும் தீவிரமாக ஆலோசித்தது.
”சிவப்பு ரேஷன் கார்டுதாரர் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்ட தொகை உயர்த்தி வழங்கப்பட்டிருப்பதை அடுத்து, மஞ்சள் கார்டு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும்,” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.