21.03.2025 – சர்வதேசம்
தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு,
நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
19/03/2025
அபூர்வமான கலைப் படைப்பாளி
நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு.
தமிழீழ தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த, தமிழ் தேசியப் பற்றாளர் ஒருவரை நாம் இழந்து விட்டோம். விடுதலைப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாகவும், ஊக்க சக்தியாகவும் விளங்குவது தேசப்பற்று. இந்த தேசப்பற்று இவரிடம் நிறைந்திருந்தது ; அவரது ஆழ்மனதில் ஆழமாக வேரோடி அவரை ஆட்கொண்டு, அளப்பெரிய விடுதலை வேட்கையாக அவரிடம் வெளிப்பட்டிருந்தது. இவரது ஆழ்மனதை ஆட்கொண்டிருந்த தேசப்பற்று என்ற அபூர்வ சக்தியை, தணியாத விடுதலை நெருப்பாகப் பற்றவைத்து, அதற்காகவே தனது வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணித்த, அபூர்வமான கலைப் படைப்பாளி நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்களைத் தமிழீழ தேசம் இழந்து நிற்கின்றது.
இயற்கையாகவே தேசப்பற்று நிறைந்த இந்த மனிதருக்கு, தேசியத் தலைவர் மீதும், எமது சுதந்திர இயக்கம் முன்னெடுத்து வந்த விடுதலைப் போராட்டத்தின் மீதும், இலட்சியப் பிடிப்பை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் போருக்கு உரமூட்டும் வகையில், எமது விடுதலை இயக்கத்தின் முக்கியமான ஊடகங்களாக இயங்கி வந்த நிதர்சனம் தொலைக்காட்சியிலும், புலிகளின் குரல் வானொலியிலும் ஆரம்ப காலப் பகுதியிலிருந்து, தான் அலாதியாக நேசித்த நாடகத் துறையில், பல வருடங்களாக அன்னார் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க அரும்பணிகள் பாராட்டுக்குரியவை. அத்தோடு உக்கிரமான போர்க்காலத்தில், வெளியே குறிப்பிட முடியாத, சில முக்கியமான இயக்க வேலைத் திட்டங்களுக்கு, தனக்கு ஏற்படப்போகும் உயிர் ஆபத்தைக் கூடப் பொருட்படுத்தாது, இவர் வழங்கிய இடுபணிகளைப் பற்றி, அவர் நேசித்த மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு, எமக்கு உள்ளதென நாங்கள் கருதுகின்றோம். தனது இறுதிக் காலத்திலும், தாயகத்தில் தமிழ்த் தேசியத்தை நிலை நிறுத்தும் சில செயற்பாடுகளில், தமிழீழ அரசியல்துறையுடன் இணைந்து காத்திரமான பணிகளின் செயற்பாட்டாளராகக் கடமையாற்றினார்.
அமரர் பாலச்சந்திரன் அவர்கள் தமிழீழ மண் தந்த ஒரு சிறந்த நாடகக் கலைஞர், நெறியாளர், இயக்குனர், பாடகர், வில்லிசைக் கலைஞர் என, கலைகளுக்காகவே இவர் வாழ்ந்தார். கலைகள் பற்றியே சதா சிந்தித்தார். புதிய கலை வடிவங்களை கண்டறிந்து, அவற்றோடு புதிய நுட்பங்களை புகுத்தி காலத்துக்கேற்ப, வரலாற்றுப் பரிமாணங்களை கலைப் படைப்புக்களாகப் படைத்தார். அவரைப் போலவே அவரது கலைப் படைப்புக்களும் மிகவும் தத்துரூபம் வாய்ந்தவை. அனைவரையும் கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவவை, அத்தோடு அவர் தனது கலை படைப்புகள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும், ஒடுக்கு முறைக்கு எதிராக மக்கள் எழுச்சியையும் முடுக்கி விட்டார்.
இவர் தனது வாழ்நாளில் முப்பதுக்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்தும், அவற்றில் சிலவற்றை இயக்கியும் உள்ளதோடு, அந்தத் துறைகளில் தனது சிறப்பாற்றல்களை வெளிப்படுத்தியமைக்காக கலைமாமணி விருது உட்பட 19 விருதுகளைப் பெற்றுள்ளமை, தமிழீழக் கலைத்துறைக்கு, இவர் ஆற்றிய அரும்பணிகளுக்கு கிடைத்த வெகுமானம் என்பதை எண்ணி, ஈழத் தமிழினம் பெருமைப்பட்டுக் கொள்கின்றது.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரோடும், தமிழீழ அரசியல்துறையினராகிய நாம், எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கின்றோம். அவரது உறுதியான இனப்பற்றுக்கும், விடுதலை வேட்கைக்கும், இவர் தமிழீழக் கலைத்துறைக்கு ஆற்றிய அரும்பணிகளுக்கும் மதிப்பளிக்கும் முகமாக, தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான “மாமனிதர்” என்ற விருதினை, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி, இந்த அபூர்வமான கலைப் படைப்பாளி நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கு வழங்குவதில், தமிழீழ அரசியல்துறையினராகிய நாம் பெருமையடைகின்றோம்.
சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உன்னத மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை, சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
கி. நல்லையா
நிர்வாகப் பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
ச. அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்


