23.03.2025 – சென்னை
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளது. தொடரின் முதல் போட்டியில், கடந்த 12 ஆண்டுகளாக, மும்பை அணி வெற்றி பெற்றதில்லை என்ற மோசமான சாதனை இன்றும் தொடர்ந்துள்ளது.
18வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் ஷர்மா, முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அவரது விக்கெட்டை கலீல் அகமது கைப்பற்றினார். தொடர்ந்து, 3வது ஓவரில் ரிக்கெல்டன் (13) விக்கெட்டை கலீல் கைப்பற்றினார்.
தொடர்ந்து, இந்த சீசனில் சென்னை அணிக்காக அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே வில் ஜேக்ஸ் (11) விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதனால், மும்பை அணி 36 ரன்னுக்கே 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பிறகு, கேப்டன் சூர்யகுமார் யாதவுடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நூர் அகமது வீசிய 11வது ஓவரில் சூர்யகுமார் யாதவை (29) கண் இமைக்கும் நொடியில் ஸ்டம்பிங் செய்து தோனி அவுட்டாக்கினார்.
தொடர்ந்து, திலக் வர்மா (31), மின்ஸ்(3), நமன் தீர் (17) ஆகியோரின் விக்கெட்டை நூர் முகமது கைப்பற்றி அசத்தினார். சென்னை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசியதால், மும்பை அணியால் ரன் குவிக்க முடியவில்லை. கடைசியில் தீபக் சாஹர் சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். அவர் 15 பந்துகளுக்கு 28 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் நூர் முகமது 4 விக்கெட்டுகளும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், அஸ்வின், எல்லிஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து, ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஜோடி சிறப்பாக ஆடியது. ரவீந்திர ஒருமுனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் கேப்டன் ருதுராஜ் அதிரடி காட்டினார். இதனால், அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவரது அதிவேக அரைசதமாகும்.
தொடர்ந்து, மும்பை அணியின் இளம் வீரர் விக்னேஷ் புத்தூரின் சுழலில், ருதுராஜ் (53), துபே(9) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். இருப்பினும் ரவிந்திரா நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். சென்னை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்திய சென்னை அணி வீரர் நூர் அகமது, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.